மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ராஜா வழக்கு: விழுப்புரம் எஸ்பி பதிலளிக்க உத்தரவு!

ராஜா வழக்கு: விழுப்புரம் எஸ்பி பதிலளிக்க உத்தரவு!

பெரியார் சிலைகளை இழிவுபடுத்தியது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்திலும், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தார் திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ஜெயரட்சகன். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரி மனு தாக்கல் செய்தார்.

ஜெயரட்சகனுக்காக வழக்கறிஞர் துரை அருண் தாக்கல் செய்துள்ள மனு, இன்று (மார்ச் 13) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அம்மனுவில், “திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போலத் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, வேலூர் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு, நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையில் ராஜா செயல்படுகிறார் . அவர் மீது விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் மாவட்ட் எஸ்.பி. ஜெயக்குமார் இந்த மனுவுக்கு 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர் நீதிமன்றம்.

விழுப்புரம் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் ராஜாவுக்கு எதிராகப் பல காவல் நிலையங்களில் புகார் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் வரும் 20ஆம் தேதிக்குள் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் அளிக்கும் பதிலை அடுத்து நீதிமன்றம் என்ன உத்தரவிடப் போகிறது என்பதை அறிய பல மாவட்ட எஸ்.பி.க்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon