மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ரஜினி, கமலுக்கு ‘தரமணி’ தயாரிப்பாளர் வேண்டுகோள்!

ரஜினி, கமலுக்கு ‘தரமணி’ தயாரிப்பாளர் வேண்டுகோள்!

டிஜிட்டல் பிரச்சினையில் சினிமா உலகம் முடங்கியிருக்கும் நிலையில், ரஜினி, கமலுக்கு ‘தரமணி’ தயாரிப்பாளர் ஜே. சதிஸ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிஜிட்டல் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் இரண்டு வாரங்களாக எந்தப் புதிய படமும் வெளியாகவில்லை. இந்த மாதம் திரைக்கு வரத் தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மார்ச் 16 முதல் திரையரங்கு உரிமையாளர்களும் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கமும் படப்பிடிப்பு, இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு, படத்தொகுப்பு உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்தவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனால் படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர். பெஃப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் வருத்தத்தில் உள்ளனர். இந்த ஸ்டிரைக்கால் திரையுலகம் முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஜே. சதிஸ் குமார் ரஜினி, கமலுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலுக்கு உயர்த்திக்கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றிவிட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாகத் தவிக்கிறது. நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைப்படத் துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்துவிட்டு உங்கள் அரசியல் பயணத்தைத் துவக்குங்கள். நாங்களும் உடனிருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக்கொண்டிருக்கிறது கலைக் குடும்பம். கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon