மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

கௌரி லங்கேஷை அடுத்து பகவானைக் கொல்ல சதியா?

கௌரி லங்கேஷை அடுத்து பகவானைக் கொல்ல சதியா?

கௌரிலங்கேஷ் கொலை தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டிருக்கும் நவீன்குமாருக்கு, இன்னொரு புரட்சிகர எழுத்தாளரான கே.எஸ். பகவானையும் கொலை செய்ய திட்டம் இருந்திருக்கிறது என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடாகாவில் புகழ் பெற்ற பத்திரிகையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் கடந்த வருடம் செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூருவிலுள்ள தனது வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இந்த வழக்கில் துப்பு ஏதும் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி சந்தேகப்படும்படியான துப்பாக்கி வைத்திருந்த நவீன் குமார் என்பவரை சிறப்புப் புலனாய்வுக்குழு பிடித்து விசாரணை செய்தது. அப்போது நவீன் குமார் இந்து யுவசேனா என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் கர்நாடகா தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்து இயக்கங்களோடு தொடர்பில் இருப்பவர் என்பதையும் அறிந்தது புலனாய்வுக் குழு. கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முதல் நபர் என்றும் குமாரை சுட்டிக் காட்டினார்கள்.

இந்நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அதிகாரியும், பெங்களூரு மேற்கு துணை ஆணையருமான அனுசெத் இதுபற்றி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசியபோது, “கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் இதேபோல இன்னொரு எழுத்தாளரான கே.எஸ். பகவான் என்பவரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதற்காக துப்பாக்கியுடன் தயாராகும்போதுதான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே அவர் மீது ஆயுதச் சட்ட வழக்கோடு கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டிருக்கிறது. ஆயுத சட்டத்தின் கீழ் குமாருக்கு பெயில் வழங்கப்பட்டாலும் போலீஸார் சார்பில் மற்ற வழக்குகளைக் காரணம் காட்டி பெயிலை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்படும்’’ என்றார்

குமாரை நேற்று பெங்களூரு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது குமாரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து நீதிமன்றமும் உண்மை அறியும் சோதனைக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் குமாரின் வழக்கறிஞர் வேதமூர்த்தி , ‘’இந்த வழக்கில் குமார் போலீஸாரால் ஜோடிக்கப்பட்ட குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறார். குமார் தன்னை நிரபராதி என்று நிரூபிப்பார்’’ என்று பேட்டியளித்துள்ளார்.

குமாரின் மீதான புதிய வழக்கால் நீதிமன்றக் காவலை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon