மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

காற்றழுத்தத் தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

காற்றழுத்தத் தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவுவதால் இலங்கை, கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா, தென் கேரளக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை, மாலத்தீவுகள் அருகே நிலவிவரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, தென் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியப் பெருங்கடலில் இலங்கை, குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு அருகே வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் மாலத்தீவு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் குமரிக்கடல் மற்றும் தெற்கு கேரளாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே, அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தெற்கு கேரளக் கடல் பகுதி, மாலத்தீவு பகுதிகளின் அருகே மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்ற பிறகு, லட்சத்தீவு பகுதியை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் 15ஆம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்து வரும் 2 நாட்களுக்குத் தென் தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அறிவிப்புக்கு முன்னதாகவே ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 604 படகுகள் திரும்பிவிட்டதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். இன்னும் 52 படகுகள் கரை திரும்பவில்லை எனக் கூறிய அவர், அந்தப் படகுகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருக்க வாய்ப்புள்ளதால், அவர்களைத் தொடர்புகொண்டு, கரைக்கு வரவழைக்கும் பணிகளைச் செய்துவருவதாகவும் தெரிவித்தார். தொடர்புகொள்ள முடியாத காரணத்தினால், நடுக்கடலில் உள்ள மீனவர்களை மீட்க கடலோரக் காவல் படை மற்றும் இந்திய விமானப் படைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இன்று முதல் 3 நாட்களுக்குக் கேரளக் கடல் பகுதி கொந்தளிப்பாக இருக்கும், அதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon