மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

கோவையில் ஜவுளித் தொழில் முடக்கம்!

கோவையில் ஜவுளித் தொழில் முடக்கம்!

ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வழங்க வேண்டிய 6 ஆயிரம் கோடி வரிச்சலுகைகளை மத்திய அரசு வழங்காததால் ஜவுளித் தொழில் முடங்கியுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய ஆலைகள் சங்கச் செயலாளர் செல்வராஜ் தினகரன் ஊடகத்திடம் பேசுகையில், “ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய மாநில வரி ஏற்றுமதிச் சலுகை 3 ஆயிரம் கோடி மற்றும் ஜிஎஸ்டி வரிச் சலுகை 3 ஆயிரம் கோடி என மொத்தம் 6 ஆயிரம் கோடி மத்திய அரசால் கடந்த 6 மாதத்திற்கு மேலாக வழங்கப்படாமல் இருப்பதால் ஜவுளித் துறை பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை, துணி, நூல் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான வருவாய் இல்லாமல் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்திய ஜவுளித் துறை பிற நாடுகளுடன் மத்திய அரசின் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதில்லை. ஆனால் பிற நாடுகள் வெளிநாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதனால் நம் நாடு ஜவுளி ஏற்றுமதியின் போது, பிற நாடுகள் இறக்குமதி வரி செலுத்த வேண்டியுள்ள நிலையில் இந்தியாவில் உற்பத்தி செலவு அதிகரிக்கின்றது. பிற நாடுகளின் உற்பத்தி விலை குறைந்திருப்பதால் அவர்களின் ஏற்றுமதி விலையும் குறைகிறது. இதனால் நமது ஏற்றுமதியாளர்களும் விலையைக் குறைக்கின்றனர். நம் ஜவுளித் துறைக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகளால் 2 சதவிகிதம் லாபமே கிடைக்கிறது. ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் மூலம் மூலதனம் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஜவுளித் துறை பெரும் பாதிப்புக்குள்ளாகும்” எனத் தெரிவித்தார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon