மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

குற்றப் பின்னணி உடையோர் அதிமுகவில் கிடையாது!

குற்றப் பின்னணி உடையோர் அதிமுகவில் கிடையாது!

குற்றப் பின்னணி கொண்ட யாரும் அதிமுகவில் கிடையாது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், குற்றப் பின்னணி கொண்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், உத்தரப் பிரதேசத்தில் அதிகமாக 248 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழ்நாட்டில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 178 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மொத்தமாக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (மார்ச் 13) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "குற்றப் பின்னணி கொண்ட யாருக்கும் அதிமுகவில் இடமே கிடையாது. எனவே இது எங்களுக்குப் பொருந்தாது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் வேட்பாளர்களாக வரக் கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. குற்ற பின்னணி கொண்டவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவதாகக் கூறப்படும் கருத்தை மற்ற கட்சிகள் ஆராய்ந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, "யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து எதுவுமில்லை. கட்சிக் கொடி என்பது அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானதாகும். அதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதேபோல சின்னத்தையும் யாரும் உரிமை கொண்டாட முடியாது. வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது பற்றிக் கவலையில்லை" என்று தினகரனை விமர்சனம் செய்தார்.

மேலும் "ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்கள் 51 விசைப் படகுகளில் கரை ஒதுங்கி உள்ளனர். யாரும் கவலைப்படத் தேவையில்லை. குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தினை அடுத்து மலையேற்றத்தினை ஒழுங்குபடுத்த விதிகள் வகுக்கப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon