மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

இன்டிகோ: 47 விமானங்கள் ரத்து!

இன்டிகோ: 47 விமானங்கள் ரத்து!

என்ஜின் கோளாறு காரணமாக இன்று (மார்ச் 13) 47 இன்டிகோ விமானங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று காலை (மார்ச் 12) மும்பையிலிருந்து லக்னோ நோக்கி 186 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இன்டிகோ நிறுவனத்தின் A320 ரக ஏர்பஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் இரண்டாவது என்ஜின் திடீரென்று செயலிழந்தது. அதிர்ச்சியடைந்த விமானி, அருகில் இருந்த அகமதாபாத் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையை உடனடியாகத் தொடர்புகொண்டு, அவசரமாகத் தரையிறங்க அனுமதி அளிக்குமாறு கூறியுள்ளார். அகமதாபாத் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டு, 186 பயணிகள் மீட்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, 'A320 நியோ' என்ஜின் பொருத்தப்பட்ட ஏர் இன்டிகோ நிறுவனத்தின் 8 விமானங்கள் மற்றும் ஏர்கோ நிறுவனத்தின் 3 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களின் சேவை நேற்று தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்டிகோ நிறுவனம் 47 உள்நாட்டு விமானங்களின் சேவையை இன்று ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ் மற்றும் கவுகாத்தி போன்ற நகரங்களிலிருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon