மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ஏற்றுமதி வரியைக் குறைக்கக் கோரிக்கை!

ஏற்றுமதி வரியைக் குறைக்கக் கோரிக்கை!

சர்க்கரைக்கான ஏற்றுமதி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் தேசிய கூட்டமைப்பு சார்பாகவும், இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு மற்றும் கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மத்திய உணவுத் துறை அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 2017-18 பருவ ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி முன்னதாக 26.1 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உற்பத்திக்கான மறு மதிப்பீட்டில் 29.5 மில்லியன் டன் அளவிலான சர்க்கரை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக இருப்பு தேங்காமல் இருக்க, 2018 அக்டோபர் வரை 1.5 முதல் 2 மில்லியன் டன் வரையிலான சர்க்கரையை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சர்க்கரையின் விலை உள்நாட்டை விடச் சர்வதேச அளவில் குறைவாகவே உள்ளது. சர்வதேச விலைக்கும் உள்நாட்டு விலைக்கும் இடையே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.650 வித்தியாசம் உள்ளது. மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்குச் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய இத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். எனவே, உள்நாட்டுச் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதியை மேம்படுத்தும் பொருட்டு சர்க்கரைக்கான ஏற்றுமதி வரியை நீக்கும்படி இத்துறையினர் அரசிடம் முறையிட்டுள்ளனர்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon