மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

தொழில் துறை உற்பத்தி உயர்வு!

தொழில் துறை உற்பத்தி உயர்வு!

சென்ற ஜனவரி மாதத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 7.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தொழில் துறையில் 23 பிரிவுகளில் சுமார் 16 பிரிவுகள் இந்தாண்டு ஜனவரியில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாகப் போக்குவரத்து சாதனங்களுக்கான உற்பத்தி 33.1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து மர சாமான்கள் உற்பத்திப் பிரிவில் 27.8 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், டிரெய்லர் உற்பத்தி 26.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பின்னடைவாக, புகையிலை உற்பத்திப் பிரிவில் 46.5 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த தொழில் துறை உற்பத்தி 7.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், அதற்கு முந்தைய டிசம்பர் மாதத்தில் இந்த வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருந்ததாகவும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சில்லறைப் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 4.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கிராமப் புறங்களில் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 4.3 சதவிகிதமாகவும், நகர்ப் புறங்களில் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 4.5 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் காய்கறிகளின் விலை 17.5 சதவிகிதமும், முட்டைகளின் விலை 8.5 சதவிகிதமும், பால் மற்றும் பால் பொருட்களின் விலை 3.8 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. பான், புகையிலை மற்றும் போதைப் பொருட்களின் விலை 7.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon