மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

கண் நீர் அழுத்த நோயால் 80 கோடி பேர் பாதிப்பு!

கண் நீர் அழுத்த நோயால் 80 கோடி பேர் பாதிப்பு!

கண் நீர் அழுத்த நோயால், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதன்மை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் "க்ளோகோமா" என்ற கண்நீர் அழுத்த நோயைப் பற்றி பொதுமக்களிடம் தெரியப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

இந்த வருடம் மார்ச் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினங்களையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் ராமகிருஷ்ணன் இது குறித்த தகவல்களைத் தெரிவிக்கிறார்.

"உலக அளவில் நிரந்தர பார்வை இழப்புக்கு கண்நீர் அழுத்த நோய் முக்கியக் காரணமாகிறது. பரம்பரை பரம்பரையாக இந்நோய் வருவதால், பரம்பரை நோய் என்றும் இதைக் கூறுவார்கள். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த முன் அறிகுறியும் இன்றிக் கண் பார்வையை இழக்க நேரிடும்.

மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கண் நீர் அழுத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அவ்வாறு செய்தால் இதனால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்கலாம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்களும் பரிசோதனை செய்து, பார்வை இழப்பைத் தடுக்கலாம். இந்தக் கண் நீர் அழுத்த நோய் சிறிய குழந்தைகளுக்கும்கூட வருகிறது. உலக அளவில் இந்நோயால் 4 கோடிப் பேர் பார்வை இழந்துள்ளனர். மேலும் 80 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண் நீர் அழுத்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. பார்வை இழப்பைக் கட்டுப்படுத்தலாமே தவிர, இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியாது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, கண்நீர் அழுத்த நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது" என்று மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பாக 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மார்ச் 11ஆம் தேதி கண் நீர் அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. கண் நீர் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி அமைக்கும் நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon