மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

காயமடைந்தவர்களுக்கு ஆளுநர் ஆறுதல்!

காயமடைந்தவர்களுக்கு ஆளுநர் ஆறுதல்!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குரங்கணி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால், அப்பகுதியில் மலையேற்றத்திற்குச் சென்றிருந்த 36 பேர் சிக்கினார்கள். அதில் 10 பேர் உயிரிழந்தனர். 16 பேர் மதுரை அரசு மருத்துவமனை, அப்பல்லோ, மீனாட்சி உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலையை 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள். காயமடைந்தவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் நேற்றிரவு சந்தித்த ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 13) மதுரை சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். ஆளுநருடன் அமைச்சர் அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

ஆளுநர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த துயரமுற்றேன். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன். காட்டுத் தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்றத் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப் படை, கமாண்டோக்கள் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோரைப் பாராட்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon