மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு!

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு!

குஜராத் மாநிலம் வதோதரா கிரிக்கெட் மைதானத்தில் பெண்களும், மாணவிகளும் இணைந்து, மார்பகப் புற்றுநோய் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வுக்கான மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகப் பின்பற்றப்படுகிறது.

இந்திய, ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நேற்று (மார்ச் 13) வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றது.

இதையடுத்து, கிரிக்கெட் மைதானத்திற்குள் சுமார் 2 ஆயிரத்து 400 பெண்களும், பள்ளி மாணவிகளும் இணைந்து, வட்டவடிவமாக நின்று விழிப்புணர்வுக்காக மனிதச் சங்கிலி ஏற்படுத்தினர். மார்பகப் புற்றுநோய் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலியில், கிரிக்கெட் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

உலக அளவில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில், மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 1.4 கோடிப் பெண்களும், இந்தியாவில் 1.15 லட்சம் பெண்களும், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில், 73 லட்சம் பேரும், இந்திய அளவில், 53 ஆயிரம் பேரும், இந்தப் புற்றுநோயால் இறக்கின்றனர். பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். எனவே, அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

தற்போது மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon