மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

உடல் எடை குறைய சிபிஐக்கு டயல் செய்யுங்கள்: கார்த்தி

உடல் எடை குறைய சிபிஐக்கு டயல் செய்யுங்கள்: கார்த்தி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக உடல் எடை குறைய வேண்டுமென்றால் சிபிஐக்கு டயல் செய்யுங்கள் எனக் கிண்டலாகக் கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி அன்னிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சிபிஐ அவரை 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், நேற்று (மார்ச் 12) பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 12 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிபதி சுனில் ராணா உத்தரவிட்டார்.

முன்னதாக, நீதிமன்றத்தின் உத்தரவுக்காகக் காத்திருந்த கார்த்தி சிதம்பரம் அங்கிருந்த என்.டி.டிவி. ஊடகவியலாளரிடம், “யாரேனும் உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்பினால் உடற்பயிற்சி நிலையமோ, சிக்கன உணவு முறையோ தேவையில்லை, சிபிஐ காவலில் இருங்கள், அங்கு கொடுக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள், உடல் எடை தானாகக் குறையும்” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

மேலும், “நான் எனது பசியை இழந்துவிட்டேன். குறைவாகவே உணவு எடுத்துக்கொள்கிறேன். உடல் எடை குறைந்துள்ளது, இதுவும் நல்லதுதானே” என்று கூறியுள்ள அவர், உடல் எடை குறைந்ததால் பழைய உடைகள் தளர்வாகியுள்ளன, புதிய உடைகள் தேவைப்படுகின்றன; எனவே, யாராவது உடல் எடை குறைய வேண்டுமென்று விரும்பினால் சிபிஐக்கு டயல் செய்யுங்கள்” என்று பகடியாகத் தெரிவித்தார்.

சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் வைக்காத அவர், “அவர்கள் என்னிடம் மிகவும் தொழில்முறையாக நடந்துகொண்டனர்” என்று குறிப்பிட்டார்.

“சிபிஐ காவலில் எனக்கு செல்போன் பயன்படுத்தத் தடை, கையில் வாட்ச் கிடையாது; மணி என்னவென்று சிபிஐ அதிகாரிகளைத்தான் கேட்கிறேன். இது நல்ல அனுபவமாக உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon