மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ஈழம் பற்றிப் பேசும் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’!

ஈழம் பற்றிப் பேசும் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'சாட்சிகள் சொர்க்கத்தில்’.

இயக்குநர் ஈழன் இளங்கோ இயக்கத்தில் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை மையமாக வைத்து 'சாட்சிகள் சொர்க்கத்தில் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால், போரில் நடந்த விஷயங்கள் எதையும் இந்தப் படம் காட்சிப்படுத்தவில்லை. பாலசந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாலசந்திரனின் வேடத்தில் இயக்குநர் ஈழன் இளங்கோவின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார். ஈழத்தில் நடந்த பாலியல் வல்லுறவுக் கட்சிகளோ, கொலைக் கட்சிகளோ, சித்திரவதைக் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும், ஆழமான உணர்வுகளையும் வலியையும் இத்திரைப்படம் அடக்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிலும், பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்பப் பணிகள் தமிழ்நாட்டுத் திரைக் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளன. சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல பாடகி சுர்முகி இப்படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று (மார்ச்11) நடந்தது. ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிபூர்வமாக அமைந்தது.

இயக்குநர் இளங்கோ விழாவில் பேசும்போது, “சாட்சிகள் சொர்க்கத்தில் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படம். பார்ப்பது மட்டும் அல்ல, இத்திரைப்படத்தை வேற்று மொழி இனத்தவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். மொழி, உரையாடல், கதை அனைத்தும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளன. திரையுலக வரலாற்றில், முக்கியமாக, ஈழத் தமிழரின் திரையுலக வரலாற்றில், இப்படம் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஈழத் தமிழர்களின் வலி இதுவரை கூறப்படாத வேறொரு வடிவில், வேறொரு அணுகுமுறையில், வேறொரு பரிமாணத்தில் கூறப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon