மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

மூலக்கொத்தளம் மயானம்: மதிமுக சார்பில் போராட்டம்!

மூலக்கொத்தளம் மயானம்: மதிமுக சார்பில் போராட்டம்!

மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி மதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (மார்ச் 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

சென்னை, வண்ணாரப்பேட்டை அருகே உள்ளது மூலக்கொத்தளம் மயானம். 20 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த மயானத்தில் கடந்த 120 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும்வருகிறது. முக்கியமாக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மொழிக்காகவும் போராடியவர்கள் பலரது உடல்களும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தாளமுத்து, நடராசன் ஆகியோரின் உடல்கள் இந்த மயானத்தில்தான் எரிக்கப்பட்டன. ஈழ இனப் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரின் உடலும் இங்குதான் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில், மூலக்கொத்தளம் மயானத்தில் குடியிருப்புகள் கட்டப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில், மதிமுக சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக சார்பில் சேகர்பாபு, இயக்குநர் வ. கவுதமன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon