மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

உஷா கர்ப்பிணி அல்ல!?

உஷா கர்ப்பிணி அல்ல!?

திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த உஷா கர்ப்பிணிப் பெண் அல்ல என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூரில் ராஜா - உஷா என்ற தம்பதியர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனத் தணிக்கைக்கு நிற்காமல் சென்றதாகக் கூறி காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் வாகனத்திலிருந்து விழுந்த உஷா வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது அவர் கணவர், தன் மனைவி உஷா மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அழுதார். இந்த அழுகுரல் மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தி உஷாவின் மரணத்துக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்தது.

இதற்கிடையில், உஷாவின் உடற்கூறாய்வு முடிவுகளை திருச்சி மருத்துவக் கல்லூரி டீன் அனிதா வெளியிட்டுள்ளார். இவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த அறிக்கையை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், இறந்த உஷா கர்ப்பிணி அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக காவல் துறை அதிகாரி எஸ்பி கல்யாணுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மருத்துவப் பரிசோதனையில் ராஜா மது அருந்தி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon