மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

புதுப்புது கொடிகள் முளைக்கலாம்: திமுகதான் ஆட்சி அமைக்கும்!

புதுப்புது கொடிகள் முளைக்கலாம்: திமுகதான் ஆட்சி அமைக்கும்!

‘அரசியல்களத்தில் புதுப்புது கொடிகள் முளைப்பதும், புதுப்புது பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான். எனினும், இருவண்ணக் கொடியை உணர்வில்கொண்ட திமுகவுக்கு மட்டுமே ஆட்சி அமைக்கும் வலிமை உள்ளது’ என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் வரும் 24ஆம் தேதி திமுக மண்டல மாநாடு தொடங்குகிறது. மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதி ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அக்கட்சி தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அழைப்பு விடுத்த நிலையில், நேற்று (மார்ச் 12) இரண்டாவது முறையாக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஈரோடு மண்டல மாநாட்டுப் பணிகளின் ஒவ்வோர் அங்குல முன்னேற்றம் குறித்த செய்திகளும் உடனுக்குடன் வந்தவண்ணம் உள்ளன. திமுகவின் முன்னணியினர் பலரும் ஈரோட்டுக்குச் சென்று மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்து, தாங்கள் பெற்ற இன்பத்தை நானும் பெற வேண்டும் என்கிற உணர்வுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஈரோட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர் ஓட்டங்கள் மூலம் பல கிலோமீட்டர் பயணித்து மாநாடு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைப் பொதுமக்களிடம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பகுத்தறிவுப் பகலவனாம் - நம் இனத்துக்குச் சுயமரியாதை உணர்வூட்டிய தந்தை பெரியாரின் ஈரோட்டு மண்ணில், பேரறிஞர் அண்ணா உருவாக்கித் தந்த கழகத்தைக் கட்டிக்காத்து இந்திய அரசியலைத் தன் பக்கம் திருப்பிய தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடனும், வழிகாட்டுதலுடனும் நடைபெறும் மண்டல மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளுடன் அழைப்பிதழும் தயாராகிவிட்டது.

வீட்டில் ஒரு விழா என்றால் அதைக் குடும்பத்து உறவுகளுடன் முதலில் பகிர்ந்துகொள்வதுதானே வழக்கம். அதுபோல, கழகம் எனும் குடும்பத்தின் உறுப்பினர்களாம் உடன்பிறப்புகளாகிய உங்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் விவரங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். ஈரோடு தந்தை பெரியார் திடல், அண்ணாநகரில் மார்ச் 24 சனிக்கிழமை, 25 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ள மண்டல மாநாட்டில், திமுகவின் வளர்ச்சிக்கு உரமாகி, மரணத்துக்குப் பிறகும் நம் மனதில் உயிர்த்துடிப்புடன் நிறைந்திருக்கும் தீரர்களை நினைவூட்டும் வகையில் அவர்களின் பெயர்கள் ஒவ்வோர் இடத்துக்கும் சூட்டப்பட்டுள்ளன.

தஞ்சை மண்டல தளகர்த்தராக விளங்கிய கோ.சி.மணி பெயரில் மேடை, முரட்டுப் பக்தன் எனக் கலைஞரால் போற்றப்பட்ட தூத்துக்குடி என்.பெரியசாமி பெயரில் பந்தல், பி.ஏ.சாமிநாதன் பெயரில் அரங்கம், தமிழ் மணக்கப் பணி செய்து மறைந்த பேராசிரியர் முனைவர் மா.நன்னன் பெயரில் உள்முகப்பு, எவரெஸ்ட் மு.கணேசன் பெயரில் முன் முகப்பு, ஈரோடு மா.சுப்ரமணியம் பெயரில் நுழைவாயில் என ஒவ்வொன்றிலும் தீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மண்டல மாநாட்டின் இரு நாள்களிலும் 50 தலைப்புகளில் திமுக சொற்பொழிவாளர்கள் கருத்து மழை பொழிகிறார்கள்.

தமிழ்நாட்டின் நலன் காக்கும் மாநாட்டுத் தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படவிருக்கின்றன.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில் அமைக்கப்பட்டுள்ள திராவிட இயக்க வரலாற்றுக் காட்சியை அப்படியே அச்சில் வார்த்ததுபோல ஈரோட்டில் மாநாட்டுக் காட்சி உருவாகியுள்ளது. பொதுமக்களும் இன்றைய தலைமுறையினரும் திராவிட இயக்கக் கொள்கைகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசியல்களத்தில் புதுப்புது கொடிகள் முளைப்பதும், புதுப்புது பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான். எனினும், இருவண்ணக் கொடியை உணர்வில் கொண்ட திமுகவுக்கு மட்டுமே ஆட்சி அமைக்கும் வலிமை உள்ளது என்பதே தமிழ்நாட்டு மக்களின் மனதில் உள்ள எண்ணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon