மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

சிறப்புக் கட்டுரை: காட்டுக்குப் போகிறீர்களா?

சிறப்புக் கட்டுரை: காட்டுக்குப் போகிறீர்களா?

சரவணன் சந்திரன்

உண்மையாகவே துக்ககரமான மனநிலையில்தான் இதை எழுதுகிறேன். எழுதியே ஆக வேண்டும் என்பதும் உந்தித் தள்ளுகிறது. என் நண்பர்கள் பலர் ட்ரெக்கிங் போகிறவர்கள். பெயர்களைத் தேடித் தேடிப் படித்தேன். யார் போனால் என்ன? உயிர் உயிர்தானே? என் நண்பர்களும் இப்படித்தானே அழுவார்கள்.

அவர்கள் செய்த தவறுதான் என்ன? காட்டை அறியப் போனார்கள். தாங்கள் புறப்பட்டு வந்த இடத்துக்குத் திரும்பப்போக பிரயத்தனப்பட்டார்கள். எல்லா நெருக்கடிகளில் இருந்தும் விடுவித்துக் கொள்கிற ஆசுவாசத்தைத் தேடிப் போகிறவர்கள். இதில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். நாக்கிற்குச் சுவையாய்ச் சுட்டுச் சாப்பிடுகிறவர்களும் உண்டு.

ஒவ்வொரு காடும் ஒரு விதம்

இந்த இடத்தில்தான் ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல வேண்டும். தமிழகத்தில் இருக்கிற அத்தனை காடு மலைகளையும் சுற்றியவன் என்கிற முறையில் சொல்கிறேன். ஒவ்வொரு காடும் ஒரு விதம். சத்தியமங்கலத்திலிருந்து சாம்ராஜ் நகர் போகும் சாலையில் குட்டைச் செடிதானே இருக்கிறது என்று உட்கார்ந்தால் சிறுத்தை தூக்கிக்கொண்டு போய்விடும். இன்னொரு காட்டில் வேறு மாதிரி.

அதற்குள் ஓடும் ஆறுகளில் எப்போது நீர் பெருகும் என்றே தெரியாது. அதிரப்பள்ளி அருவியில் பாறையில் உட்கார்ந்து குளித்துக்கொண்டிருக்கும்போது ஆளை நீர் ஏறி அடித்துக்கொண்டு போய்விட்டது ஒருதடவை. தீக்குச்சிதானே என்று நினைப்பீர்கள். அடித்து எரிந்து சாய்த்துவிடும். சாலையில் ஓடுகிற மாதிரி நெருப்பிலும் நீரிலும் ஓட முடியாது.

ஒருதடவை ஓகேனக்கல் போயிருந்தபோது, அருவி இருக்கிற இடத்தை மூடி ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம். அந்தப் பெருவெள்ளத்தில் குடித்துவிட்டு பரிசலில் கர்நாடகா எல்லைக்குள் போய் எண்ணெய் மசாஜ் செய்கிறார்கள். அப்படிப் போனவர்கள் சிலரை வெள்ளம் மூர்க்கமாக அடித்துச் சாய்த்தது. இவர்கள் களிப்பின் எல்லையில், மெரினா பீச்சில் நின்றுகொண்டு கத்துவதைப் போல, காடுகளில் கத்த ஆசைப்படுகிறார்கள்.

சப்தம் இங்கே ஆகாது

அடிப்படையில் காடுகளும் மலைகளும் சப்தங்களுக்கு எதிரானவை. ‘ஹார்ன் அடிச்சிராதீங்க. விலங்குகள் இருக்கிற இடத்துக்குத்தான் நாம போறோம்’ என்று சொல்லிக்கொண்டே வருவான் கானுயிர் புகைப்படக் கலைஞனான நண்பன் மதுரை செந்தில் குமரன். பிளாஸ்டிக் கவரைக் கீழே போடாமல் எட்டு பை வைத்த சட்டை பாக்கெட்டில் கவனமாக மடித்து வைப்பான். இவனை மாதிரி ஆட்களும் காட்டைக் காக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தனி மனிதர்களில்லை. ஒரு பெருங்கூட்டம். அதில் ஆதிவாசி ஆட்களும் இருக்கிறார்கள். ஒரு தடவை மேகமலையில் யானை ஒன்று வழிமறித்துவிட்டது. ‘பதற்றப்படாதீங்க சார். போயி நலுங்காம அனுப்பிவிட்டு வர்றேன்’ எனக் காட்டிலேயே பிறந்த ஸ்டாலின் ஒரு சரிவுப் புதருக்குள் அதைப் பாதுகாப்பாக இறக்கி அனுப்பிவிட்டு வந்தார். ஒரு செடியைக்கூட உடைக்க விடமாட்டார் அவரோடு இருக்கையில். அவரது குழுவினர் கைபிடித்துக் காடுகளுக்குள் பல சமயங்கள் போயிருக்கிறேன்.

காடுகளைக் கைப்பற்றிய அரசியல்வாதிகள்

காட்டைக் கெடுப்பவர்களை எல்லாப் பயணங்களிலும் பார்க்கிறேன். பெரும்பாலும் களிப்பின் நிமித்தமாகக் காட்டுக்கு வருகிறவர்கள். தென் மாவட்ட அமைச்சர் ஒருத்தரின் பையனோடு ஒருதடவை களக்காடு, முண்டந்துறை போயிருந்தேன். என் வாழ்விலேயே மோசமான காட்டு அனுபவம் அது. இரவில் குடித்துவிட்டு பயங்கரமாக சத்தம் எழுப்பி, காட்டில் பாதையில் தெரியும் விலங்குகள் மீது காரை ஏற்றப் போனார்கள்.

‘கார்ல ஒரு மானைத் தூக்கிட்டுப் போறீங்களா எஜமான்?’ என உண்மையிலேயே கேட்டார்கள். அமைச்சர்களை விடுங்கள். தமிழகக் காடுகள் எல்லாமும் தமிழக அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கின்றன. அவர்கள் தயவில்லாமல் காட்டில் ஓர் இலையைக்கூடப் பிடுங்க முடியாது. அடுத்ததாக அதிகார வர்க்கம். மான் அடித்தால் சப்பைக் கறியை மட்டும் கேட்டு வாங்கிக்கொள்ளும் ரேஞ்சர்களும் இருக்கிறார்கள். நேர்மையான இளம் அதிகாரிகள் பலருண்டு.

அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டி ஓர் அங்குலம்கூட நகர விட மாட்டார்கள். யாருக்கும் அசைந்து கொடுக்க மாட்டார்கள். ஒரு தடவை சத்தியமங்கலம் கடம்பூர் வனத்திற்குள் இரண்டாவது நிலை வனக் காவலர் மேற்கொண்டு செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார். இரவு முழுவதும் அவரது குடிலில் இருந்தோம். என்னைவிட உயரமான கரடி ஒன்று அதிகாலைப் பனியைக் கிழித்துக்கொண்டு நடந்துபோனது.

அதைக் காட்டிவிட்டு அவர், ‘சைஸ பாத்தீங்கள்ல. இது மாதிரிதான் எல்லா வெலங்கும். இங்க எல்லாருக்கும் அரசியல்வாதிகளை அதிகாரிகளைத் தெரிஞ்சிருக்கு. சொன்னா செய்யணும். இல்லாட்டி தூக்கிடுவாங்க’ என்றார் மனம் நொந்து.

நவீன அடிமைகள்

இவரை மாதிரியான ஆட்களுக்கு நேர் எதிரானவர்களையும் சந்தித்திருக்கிறேன். ஏற்காடு மலைக்கு மேலே வன அதிகாரி ஒருத்தரின் விருந்தினனாகத் தங்கியிருந்தேன். அவர் சாப்பிடச் சொன்னால், ‘துரை சாப்பிட்டு முடிச்சப்பறம் அடிமை சாப்பிட்டுக்குவேன்’ எனச் சொல்பவர்களைச் சத்தியமாகப் பார்த்தேன். தரையில் ஒருத்தருக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சந்தோஷப்படுவார்கள். காட்டில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், சிக்கலில்லாமல் எதைச் செய்யவும் அனுமதிப்பார்கள்.

பெரும்பாலும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு மகா மட்டமான சரக்கு ஒரு புல் வாங்கிக் கொடுத்தால், எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். சமயத்தில் குவார்ட்டர்கூட போதும். இது மாதிரியான ஆட்களைச் சரிக்கட்டி, பெரிய அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து முறை தவறுகிறவர்கள் காட்டுக்குள் நுழைகின்றனர்.

முன்னைப் போல இல்லை

இதற்கு நடுவேதான் உண்மையிலேயே காட்டை அறிய விரும்புகிறவர்களும் உள்ளே போகிறார்கள். எல்லோருக்கும் சொல்வதுதான் இது. காடும் விலங்குகளும் முன்னைப் போல இல்லை. போதிய மழை இல்லாததால் விலங்குகள் பரிதவிப்பில் இருக்கின்றன. வழித்தடங்கள் மறிக்கப்படுவதால் அவை வாழ்விடங்களை விட்டுத் தடம் மாறுகின்றன. பருவ நிலைகள் காட்டில் உச்சத்தில் இருக்கின்றன. நீங்கள் போன பழைய காடில்லை இது.

எப்போதுமே தரையில் இருப்பவர்களால் காட்டையும் கடலையும் புரிந்துகொள்ள முடியாது. கடலோடிகள் மற்றும் காடோடிகளின் தயவோடு அவற்றை அறியச் செல்லுங்கள். காடும் கடலும் எந்த விலங்கின் சாவையும் விரும்புவதில்லை.

நன்றி: ஃபேஸ்புக் பதிவு

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon