மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினிதொடர் -3

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினிதொடர் -3

இன்றைக்கு இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்ல.... கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் பார் கவுன்சில் தேர்தல் நடைபெற இருக்கிறது. காரணம், அத்தனை மாநில பார் கவுன்சில் தேர்தல்களும் தள்ளிப் போடப்பட்டிருந்தன.

பலத்த சட்டப் போராட்டத்துக்குப் பின் வரும் மார்ச் 28 தமிழ்நாடு -புதுச்சேரி மாநில பார் கவுன்சில் தேர்தல் நடக்கிறது. மற்ற மாநிலங்களிலும் பார் கவுன்சில் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் தேர்தல் நாளைப் பெறுவதற்காக நமது மூத்த வழக்கறிஞர்கள் பலரும் எத்தனை சட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள், பல சூழ்ச்சிகளை முறியடித்திருக்கிறார்கள் என்பதைத்தான், ஏற்கனவே இருட்டறையில் ஒரு விளக்கு மினி தொடர் மூலம் பார்த்தோம். இப்போது,’பாதை தெரியுது பார்’ மினி தொடர் மூலமாக பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகளைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

இந்த போராட்டங்கள், சூழ்ச்சிகளை முறியடித்த வரலாற்றினை திரும்பிப் பார்த்தால்தான் பார் கவுன்சில் தேர்தலின் மகத்துவம் தெரியும்.

இந்திய வழக்கறிஞர்களின் சட்டப்படி மாநில பார் கவுன்சிலின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். உதாரணமாக தமிழக அரசை எடுத்துக் கொள்ளலாம். ஓர் அரசு தேர்ந்தெடுக்கபட்டு ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயில் தேர்தல் வருகிறது.அதில் அடுத்த அரசு அமைகிறது. ஆனால் பார் கவுன்சிலில் நடப்பதோ விசித்திரம்.

இந்தியாவில் இன்று மொத்தம் 19 மாநில பார் கவுன்சில்கள் இருக்கின்றன. அதாவது வழக்கறிஞர்களைப் பொறுத்து வரையறுக்கப்பட்ட மாநிலங்களாக 19 இருக்கின்றன. தமிழ்நாடு புதுச்சேரிக்கு ஒரே பார் கவுன்சில் இருப்பது போல, சில மாநிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மாநில பார் கவுன்சில் ஆக இருக்கின்றன. இவற்றில் 17 பார் கவுன்சில்களுக்கு பதவிக் காலம் முடிந்து ஆண்டுக் கணக்கில் ஆகிவிட்டது.

2011 தேர்தலில் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சி அமைத்தார். 2016 தேர்தல் வரும்போது, ‘போலி வாக்காளர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களைக் களைந்துவிட்டுத்தான் தேர்தல் நடத்த வேண்டும். அதுவரை நானே பதவியில் இருக்கிறேன்’என்று ஜெயலலிதாவே பதவியில் தொடர்ந்திருந்தால் எப்படி இருக்கும்?

அதுதான் பல மாநில பார் கவுன்சில்களில் நடந்தன. வழக்கறிஞர்கள் சட்டப்படி மாநில பார் கவுன்சில் தன் பதவிக் காலம் முடிந்து அதிகபட்சம் ஆறு மாதம் வரை பொறுப்பில் இருக்கலாம். அதன் பின் அடுத்த தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆனால். இந்தியாவின் பல்வேறு மாநில பார் கவுன்சில்களிலும் தேர்தல் உடனடியாக நடத்தப்படவில்லை.

இதற்குக் காரணமாக சர்டிபிகேட் ஆஃப் பிராக்டிஸ் என்ற கருவியை ஏவியது அகில இந்திய பார் கவுன்சில். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், கடந்த 23-8-17 அன்று உச்ச நீதிமன்றம், ‘வரும் டிசம்பர் 31 -2017க்குள் பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகளை முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவிலும் சில தெளிவுகள் தேவையாக இருந்தன. ஏனென்றால் இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தங்கள் கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்ப்புக்காக கொடுத்தவர்கள் 6 லட்சத்து 45 ஆயிரம் பேர்தான். இவர்களைத் தவிர மிச்சம் இருப்பவர்கள் அத்தனை பேரையும் போலி வழக்கறிஞர்கள் என்று முத்திரை குத்தி தேர்தல் நடைமுறைகளில் இருந்து தள்ளிவைத்துவிட முடியுமா? தமிழகத்தில் இதேபோல பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் சரிபார்ப்புக்காக விண்ணப்பித்தவர்கள் 55 ஆயிரம் பேர். அவர்களை மட்டும் வைத்து தேர்தல் நடத்திக் கொள்ளலாமா? . 2015இல் இருந்து 2017 வரை எந்த ஆவணமும் சரிபார்க்காத நிலையில் இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவ்வளவு ஆவணங்களை எப்படி சரிபார்ப்பது?

இந்த முறையீடுகளின்பேரில் கடந்த 2017 நவம்பர் 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அபய் மனோகர் சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியது. அதுதான் வரும் மார்ச் 28-ம் தேதி பார் கவுன்சில் தேர்தல் நடைபெறுவதற்கு அடித்தளமிட்ட தீர்ப்பு.

அதாவது, “இந்தியாவில் மொத்தமுள்ள 15,34,531 பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களில் வெறும் 6,44,768 வழக்கறிஞர்களே தங்கள் சரிபார்ப்பு விண்ணப்பங்களை அளித்துள்ளனர். மேற்கண்ட விவரங்களை வைத்து பார்க்கையில் தங்களது பட்டப்படிப்பு சான்றிதழோடு சரிபார்ப்பு விண்ணப்பங்களை அளித்துள்ள 6,44,768 வழக்கறிஞர்களும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியானவர்கள்’’ என்று தீர்ப்பளித்தனர்.

இந்திய அளவில் சுமார் ஆறு லட்சம் வழக்கறிஞர்கள்தான் பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்கிறது உச்ச நீதிமன்றம். இதையே தமிழ்நாடு என்ற அளவில் பார்க்கும்போது...

தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் வரை வழக்கறிஞர்களாகப் பதிவு பெற்றிருந்தாலும், சுமார் 55 ஆயிரம் வழக்கறிஞர்கள்தான் தங்கள் தகுதிச் சான்றிதழ்களை தகுதி சரிபார்ப்புக்காக அனுப்பியிருக்கிறார்கள். எனவே, 55 ஆயிரம் பேர்தான் பார் கவுன்சில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள்.

இவ்வாறு வரையறுத்த உச்ச நீதிமன்றம், 30-11-17க்குள் வாக்காளர் பட்டியலை வெளியிடுமாறு உத்தரவிட்டது. இதில் பார் கவுன்சிலுக்குக் கஷ்டமே இருக்காது. ஏனென்றால் ஏற்கெனவே சரிபார்ப்புக்கு விண்ணப்பித்த வழக்கறிஞர்களின் பெயர் பட்டியல் ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலிடமும் இருக்கிறதே...

மாநில பார் கவுன்சில்கள் தேர்தல் தொடர்பான அனைத்து செயல் திட்டங்களையும் வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அனைத்து சட்டப் பல்கலைக்கழங்களும் தங்களது சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

ஆனால் நமது மூத்த வழக்கறிஞர்கள் எதிர்பார்த்த மாதிரியே இந்தத் தீர்ப்பிலும் தப்பிக்கும் லாகவத்தை பயன்படுத்தியது இந்திய பார் கவுன்சில்.

‘சில மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் நவம்பர் 24ஆம் தேதி கொடுத்த தீர்ப்பைச் சற்று மாற்றி அமைக்க வேண்டும். கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டது இந்திய பார் கவுன்சில்.

இதற்குப் பிறகு 2017 டிசம்பர் 14- ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகத்தானது.

‘’அகில இந்திய பார் கவுன்சிலின் கோரிக்கைகளின்படி இனியும் தேர்தல் நடத்துவதற்கு அதிக அவகாசம் கொடுக்க முடியாது. ஏற்கெனவே 24ஆம் தேதி அளித்த தீர்ப்பில் வாக்காளர் பட்டியலை வெளியிட 30-11-17 கடைசி தேதி என்று உத்தரவிட்டிருந்தோம். இந்த நிலையில் இப்போது வாக்காளர் பட்டியல் வெளியிட 15-1-18 என்பதை கடைசி தேதியாக நிர்ணயிக்கிறோம். மேலும் 2018 பிப்ரவரி 15ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடவடிக்கைகளை கட்டாயமாகத் தொடங்கி ஆறு வாரங்களுக்குள் முடித்துவிட வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாநில பார் கவுன்சில்கள் ஏற்கனவே உத்தரவிட்டபடி தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கலாம்’’ என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதற்கு மேலும் தாமதப்படுத்த முடியாது என்பதால் பார் கவுன்சில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால். தமிழ்நாட்டில் இந்த தேர்தலை நடத்தும் முறை பற்றியும், வேட்பாளர்களாக போட்டியிடும் வழக்கறிஞர்களின் ’தகுதி’ பற்றியும் எழுந்த சர்ச்சைகள் பார் கவுன்சில் தேர்தலை மேலும் பரபரப்பாக்கின.

தமிழக பார் கவுன்சில் இடைக்காலக் குழு கடந்த ஜனவரி 24-ம் தேதியன்று, ‘யாரெல்லாம் பார் கவுன்சில் தேர்தலில் நிற்கலாம், நிற்கக கூடாது’ என்று புதிய வரையறைகளை வெளியிட்டது. வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதத் தீயை விதைத்தது இந்த இடைக்காலக் குழுவின் முடிவு...

இதுபற்றிப் பார்த்துவிட்டு, இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிற தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலின் அடிப்படைக் கோளாறுகளைப் பற்றி அலசுவோம்...

(பயணம் தொடரும்)

எழுத்தாக்கம்: ஆரா

பாதைதெரியுது பார் -1

பாதை தெரியுது பார்-2

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon