மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

11 விமானங்களுக்குத் தடை!

11 விமானங்களுக்குத் தடை!

என்ஜின் கோளாறு காரணமாக ஏர் இன்டிகோ மற்றும் ஏர்கோ நிறுவனங்களுக்குச் சொந்தமான 11 விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை (மார்ச் 12) மும்பையிலிருந்து லக்னோ நோக்கி 186 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இன்டிகோ நிறுவனத்தின் A320 ரக ஏர் பஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் இரண்டாவது என்ஜின் திடீரென்று செயலிழந்தது. அதிர்ச்சியடைந்த விமானி, காலை 9.38 மணியளவில் அருகில் இருந்த அகமதாபாத் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையை உடனடியாகத் தொடர்பு கொண்டு, அவசரமாகத் தரையிறங்க அனுமதி அளிக்குமாறு கூறியுள்ளார். அகமதாபாத் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

சரியான நேரத்தில் என்ஜின் செயலிழந்ததை அறிந்து விமானி செயல்பட்டதால், 186 பயணிகளும் உயிர் தப்பினர்.

பிராட் அண்ட் விட்னி என்ஜின்கள் பொருத்தப்பட்ட A320 நியோ ரக விமானங்கள் நடுவானில் பறக்கும்போது அடிக்கடி அவற்றின் என்ஜின்கள் செயலிழக்கின்றன. எனவே 11 A320 நியோ ரக விமானங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் நேற்று தடை விதித்தது. அதன்படி, ஏர் இன்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான எட்டு விமானங்கள் மற்றும் ஏர்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon