மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

சிறப்புக் கட்டுரை: நாளும் பெருகும் விவசாயிகளின் குரல்!

சிறப்புக் கட்டுரை: நாளும் பெருகும் விவசாயிகளின் குரல்!

ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்

மும்பை மக்கள் தங்களுக்கு உணவளிப்பவர்களைச் சந்தித்தனர். கொஞ்சம் அதிகப்படியாகச் சொல்ல வேண்டுமென்றால், மும்பை மக்கள் தங்களுக்கு உணவளிக்கும் மக்களுக்கு உணவு அளித்தனர். கடந்த வாரம், மகாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் பேரணி செல்வதற்காக ஒன்றிணைந்தபோது ஆயிரக்கணக்கில் மட்டுமே விவசாயிகள் இருந்தனர். ஆனால், செல்லும் வழியில் மேலும் பலர் அவர்களுடன் இணைந்ததால், 35 ஆயிரம் பேர் கொண்டதாக இந்தப் பேரணி மாறியது. ஒரு வாரத்துக்குள், இந்த விவசாயிகள் அலை நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பைக்குள் நுழைந்துவிட்டது. பல ஆண்டுகளாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தங்களது நிலையை உலகத்துக்கு உணர்த்த விவசாயிகள் தயாராகியுள்ளனர்.

விவசாயிகளின் கூக்குரல் ஒவ்வொரு நாளும் நம்மைக் கடந்து செல்கிறது எளிமையாக. ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது விவசாயிகள் தங்களுக்குள் சாட்டையால் அடித்துக்கொண்டாலோ அல்லது ஏதேனும் ஒரு விலங்கைத் தின்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினாலோ மட்டுமே அந்தச் செய்தி நம்மை உலுக்குகிறது.

இந்தியாவையே உலுக்கிவரும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் போராட்டத்தை, வழக்கம்போல மேல்தட்டு மனோபாவத்துடன் அணுகுபவர்களும் இந்த நகரத்தில் உள்ளனர். மும்பையில் போக்குவரத்துக்கு இடையூறு என்று தலைப்புச் செய்திகள் ஆங்காங்கே தென்படுகின்றன. எப்போதும் நகரவாசிகளின் கண்களுக்குப் புலப்படாத வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், இப்போது தங்களது போராட்டத்தை எல்லோரும் உணர வேண்டுமென்பதற்காக மெனக்கெடுகின்றனர். அது ஏன் என்று இவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை.

விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெருங்கூட்டமாக வருவதனால் கவன ஈர்ப்பை உண்டாக்க முடியுமென்பதும் இதன் பின்னிருக்கும் காரணம். ஆனால், இந்த முறை இன்னொரு காரணமும் இவற்றோடு சேர்ந்துள்ளது. தங்களது போராட்டத்தினால் உருவாகும் பாதிப்புகளையும் இந்த விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். குறிப்பாக, அரசுத் தேர்வுகளை எழுதும் பள்ளி மாணவர்களுக்குத் தங்களால் எந்த இடையூறுகளும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் செலுத்தும் கவனம், இவர்களது கோரிக்கைகளை விட அதிகம் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

சரி, இவர்களது கோரிக்கைகள்தான் என்ன? ஒட்டுமொத்த விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதற்குப் பதிலாக, கடந்த ஆண்டு மாநிலத்திலுள்ள ஒரு சில விவசாயிகளின் கடன்களே தள்ளுபடி செய்யப்பட்டன. பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமென்று விரும்பும் இவர்கள், அரசிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையை எதிர்பார்க்கவில்லை. நிலத்துக்கான உரிமை வேண்டுமென்று சில விவசாயிகள் நினைக்கின்றனர்; இல்லாவிட்டால், எப்போது வேண்டுமானாலும் அந்த நிலத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் என்ற நிலைமையே தற்போது உள்ளது. கிராமப்புற மற்றும் விவசாயப் பகுதிகளில் உள்ள நிலைமையானது, நெருக்கடி நிலைக்குச் சற்றும் குறைந்ததல்ல.

‘எக்னாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ என்னும் இதழில் ஹிமான்ஷூ எழுதியுள்ளதைப் போல, கடந்த ஒரு மாத காலமாகவே இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் நிலவும் சூழ்நிலையானது விவசாயிகளுக்கு ஆபத்தானதாக இருந்துவருகிறது. இந்தத் துறையின் வளர்ச்சி விகிதம் தேக்கமடைந்துள்ளது; தினசரி ஊதிய விகிதம் சரிந்துள்ளது; விவசாயக் கடன்கள் வழங்கப்படுவது அதிக அளவில் குறைந்துள்ளது; விவசாயிகளுக்கான அரசின் திட்டங்களும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்தியே இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், பட்ஜெட் அறிவிப்பினால் இருக்கும் விவசாயத் தேவைகளை முழுதாகப் பூர்த்தி செய்ய முடியாது. இப்போது மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பலன்களைத் தரவும் நெடுநாள்களாகும்.

இந்தப் பேரணியை நடத்தும் ‘அகில பாரதீய கிஸான் சபா’ அமைப்பானது, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து உருவாக்கியதாகும். திங்கட்கிழமையன்று மும்பைக்குள் நுழைந்தபோது, பாரதிய ஜனதா கட்சியின் எதிர்ப்பை இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் பேரணி அரசியல் சார்ந்தது என்று ஒரு கட்சியின் சாயத்தைப் பூசுவதன் வழியாக, இதை இழிவுபடுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன. அரசியல் என்பதற்கு ஆதாரமே மக்கள்தான் என்ற நிலையிலிருந்து விலகி வந்துவிட்ட நிலையில், விவசாயிகளின் பேரணி உண்டாக்கிய சலசலப்பைப் பின்னுக்குத் தள்ளும் விதத்தில் அச்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மும்பை எனும் நகரத்தில் வாழும் மக்களுக்கும், விவசாயிகளின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யக்கூடிய கொள்கைகளை வகுக்கும் அரசுசார் மக்களுக்கும், இந்தப் பேரணியில் கலந்துகொண்ட 35 ஆயிரம் விவசாயிகளும் ஒரு தகவலைச் சொல்லியிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது சமகாலத்தின் பிரச்சினை; இது கடுமையான அழுத்தம் தரும் பிரச்சினை. இதைப் புறக்கணிப்பதால் நிலங்களை நம்பி வாழும் சில ஆயிரம் விவசாயக் குடும்பங்களுக்கு மட்டும் பாதிப்பில்லை; அந்த நிலத்தில் விளையும் பொருள்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களின் வாழ்க்கையும் அபாயத்தில் உள்ளது.

இந்தச் செய்தியை இந்தப் பேரணி அனைவருக்கும் புரியும்படியாக உரத்த குரலில் சொல்லியிருக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்! ஏனென்றால், இது அவர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல.

நன்றி: https://scroll.in/article/871664/the-daily-fix-the-farmers-long-march-in-maharashtra-is-a-cry-for-help-that-we-must-not-ignore

தமிழில்: உதய் பாடகலிங்கம்

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon