மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை!

நீதிபதிகள்  நியமனத்தில் சர்ச்சை!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 33 மூத்த வழக்கறிஞர்களில் மூன்றில் ஒருவர் தற்போது பணியாற்றும் அல்லது ஓய்வுபெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு 33 வழக்கறிஞரின் பெயர்களை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்தது. இந்த 33 பேர் கொண்ட வரைவுப் பட்டியல் உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதில் உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளின் மகன்கள், மருமகன்கள் என அவர்களுடைய உறவினர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. அதாவது 33 பேரில், டெல்லியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியின் மனைவி ஒருவருடைய வழக்கறிஞர் உட்பட 10 பேர் நீதிபதிகளின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்தப் பரிந்துரைக்கு எதிராக அலகாபாத் மற்றும் லக்னோ வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து சட்ட அமைச்சகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கறிஞர்களின் பின்னணி குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கோரப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 83 பேர் கொண்ட மூன்று பட்டியல்களில், ஓபிசி / எஸ்சி / எஸ்டி, பெண்கள் அல்லது சிறுபான்மை சமூகத்துக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கும் உயர் நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையில் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சட்ட அமைச்சகம் ஆராயவுள்ளது.

2016ஆம் ஆண்டு அலகாபாத் நீதிபதி பதவிக்கு 30 வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். அப்போது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் 11 பேரை நிராகரித்து, 19 வழக்கறிஞர்களை மட்டும் நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் வழங்கினார். அதாவது பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்களின் பின்னணியைப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியதையடுத்து 11 பேரின் நியமனமும் ரத்து செய்யப்பட்டது. நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு அதிக வெளிப்படைத்தன்மையைக் கோரியிருந்த நிலையில் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon