மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ஆசி வாங்கி வந்தேன்!

ஆசி வாங்கி வந்தேன்!

வரும் 15ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கவுள்ள சட்டமன்ற உறுப்பினர் தினகரன், நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்து ஆசி பெற்றார்.

குக்கர் சின்னமும் அதிமுக அம்மா அணி என்ற பெயரும் வேண்டும் என்று தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் தீர்ப்பில் குக்கர் சின்னத்தை தினகரன் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்றும், விரும்பும் பெயர்களில் ஒன்றைத் தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வரும் 15ஆம் தேதி மதுரை மேலூரில் நடைபெறும் விழாவில் கட்சிப் பெயரை அறிவிக்கும் தினகரன், கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்துகிறார்.

கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில், நேற்று (மார்ச் 12) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசிய தினகரன், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் புதுக்கட்சியின் பணிகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சசிகலாவைச் சந்தித்து ஆசியையும் வாழ்த்துகளையும் வாங்கி வந்தேன். மதுரை மேலூர், தருமபுரியில் நடைபெற்ற எங்களின் பொதுக்கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். அதேபோல கட்சி தொடங்கும் விழாவுக்கு உங்களின் எதிர்பார்ப்பைவிட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகமாக வருவர்” என்று குறிப்பிட்ட அவர், “நாங்கள் இத்தனை நாள் பெயரில்லாமல் செயல்பட்டு வந்தோம். தற்போது பெயருடன் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. அதனால் தனிக்கட்சி தொடங்குகிறோம். ஜெயலலிதாவின் தொண்டர்களில் 95 சதவிகிதம் பேர் எங்களுக்குத்தான் ஆதரவாக உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். தொண்டர்கள் மற்றும் மக்களின் பலத்தால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றேன்” என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, “நாங்கள் யாருக்கும் போட்டியாகவோ அல்லது எங்களது பலத்தை காண்பிக்கவோ கட்சி தொடங்கும் விழாவை நடத்தவில்லை. அது ஒரு கட்சி தொடங்கும் விழா மட்டுமே. கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்யவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

எம்.பிக்கள் ராஜினாமா குறித்துப் பேசிய அவர், “அரசியலில் முதிர்ச்சியடையாதவர்கள்தான் எம்.பிக்கள் ராஜினாமா செய்துவிட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விடுவார்களா என்று கேட்பார்கள். அப்பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கூறவே எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கர்நாடகத் தேர்தல் முடிந்துவிட்டால் மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிடும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்த தினகரன், “கடந்த 7ஆம் தேதி நான் பெரியகுளம் வழியாகத் தேனிக்குச் சென்றபோதே அகமலை அருகில் காட்டுத் தீ பரவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் மலையேற்றம் சென்றவர்களை எப்படி வனத் துறையினர் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கு அனுமதி வாங்காமல் மலையேற்றம் சென்றுள்ளனர் என்று பதில் சொல்கிறார் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். யாருக்கும் தெரியாமல் மலையேற்றம் சென்றுவிட முடியாது. தான் தப்பித்துக் கொள்வதற்காக அவர் அப்படிக் கூறுகிறார். 15 நாள்களாக காட்டுத் தீ எரிந்துகொண்டிருக்கும் நிலையில், எப்படி மலையேற்றத்துக்கு அனுமதித்தார்கள் என்றுதான் கண்டுபிடிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon