மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

காயமடைந்தவர்களுக்கு முதல்வர் ஆறுதல்!

காயமடைந்தவர்களுக்கு முதல்வர் ஆறுதல்!

காட்டுத் தீ பரவியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை முதல்வர், துணை முதல்வர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை டிரக்கிங் கிளப் மூலம் மலையேற்றத்துக்குச் சென்றவர்கள் சிக்கினர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில், நேற்று மாலை அது 10 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக காட்டுத் தீ பரவிய இடங்களைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கோவையிலிருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காட்டுத் தீயினால் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனை, மீனாட்சி, அப்போலோ உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது உறவினர்களிடமும் ஆறுதல் கூறினார்.

பின்னர் முதல்வர், துணை முதல்வர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதல்வர் பேசுகையில், “39 பேரும் இரு குழுக்களாகப் பிரிந்து மலையேற்றத்துக்குச் சென்றுள்ளனர். திரும்பிவரும்போது ஏற்பட்ட காட்டுத் தீயினால் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்” என்று கூறினார்.

அவரிடம், ‘கடந்த மூன்று நாள்களாகவே காட்டுத் தீ எரிந்துகொண்டிருந்த நிலையில் எப்படி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டது?’ என்ற கேள்விக்கு, “மலையேற்றத்துக்கு அனுமதி பெறாமல்தான் சென்றுள்ளனர். முறையாக அனுமதி பெற்றுவிட்டுத்தான் மலையேற்றத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோடைக் காலத்தில் அனுமதிப்பது கிடையாது. ஏனெனில் இக்காலத்தில் வனவிலங்குகள் வறட்சியால் நீரைத் தேடி வரும். அவற்றிடம் சிக்கக் கூடாது என்பதற்காகவே அனுமதிக்கப்படவில்லை. அனுமதியோடு சென்றிருந்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காது” என்று தெரிவித்தார்.

‘மலையேற்றத்துக்குச் செல்லும்போது வனத் துறை அதிகாரிகள்தான் அனுமதி கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறதே’ என்ற கேள்விக்குப் பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், “இது தவறான ஒரு தகவலாகும். குரங்கணிக்கு இரு வழியாக மலையேற்றத்துக்குச் செல்லலாம். ஒருவழி வனத் துறை அனுமதித்துள்ள பகுதி. ஆனால் இவர்கள் வனத் துறை அனுமதியில்லாத கொழுகுமலை பகுதியில் மலையேறித் திரும்பியபோதுதான் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அனைத்துத் துறைகளும் இரவு முழுவதும் விழிப்புடன் செயல்பட்டு காட்டுத் தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்றியுள்ளனர். சிலர் உயிரிழந்துவிட்டனர். காயமடைந்தவர்களுக்கு குரங்கணியிலேயே மருத்துவ வசதி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரைக் காப்பாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon