மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

மருந்து கிடங்கில் சுகாதாரத் துறை இயக்குநர் ஆய்வு!

மருந்து கிடங்கில் சுகாதாரத் துறை இயக்குநர் ஆய்வு!

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மருந்து சேவை கிடங்கில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி நேற்று (மார்ச் 12) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவச் சேவை கிடங்கில் இருந்துதான், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 அரசு மருத்துவமனைகள் மற்றும் 65 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன.

காஞ்சிபுரத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சொந்தமான காலி இடத்தில் மருந்து சேவை கிடங்கு கட்ட அரசுக்குப் பரிந்துரை செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் 2.05 ஏக்கர் நிலத்தில் ரூ.3.50 கோடி செலவில் மருந்து சேவை கிடங்கு கட்டி சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இந்த மருந்து கிடங்கு செயல்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இங்கிருந்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி நேற்று மருத்துவச் சேவை கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கிடங்கில் உள்ள மருந்து மாத்திரைகள் இருப்பு பற்றியும், மருந்துகள் எந்தெந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்ற தகவல்களையும் இயக்குநர் குழந்தைசாமி கேட்டறிந்தார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon