மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

சிறப்புக் கட்டுரை: ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதிக்குமா இந்தியா?

சிறப்புக் கட்டுரை: ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதிக்குமா இந்தியா?

தேவன்ஷீ தேவ்

பொருள்கள் ஏற்றுமதி விநியோகச் சங்கிலி மேலாண்மை சேவையில் கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது டாம்கோ நிறுவனம். இந்நிறுவனம் முதன்முதலாக ஐரோப்பாவில் தொடங்கப்பட்டது. 1904ஆம் ஆண்டு டென்மார்க்கில் உள்ள செவ்ன்ட்போர்க்கில் ஏ.பி.மோல்லர் மற்றும் அவருடைய தந்தை மார்ஸ்க் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினர். 2017ஆம் ஆண்டில் இந்திய சில்லறை வர்த்தகம் மற்றும் லைஃப் ஸ்டைல் பொருள்கள் ஏற்றுமதியில் டாம்கோ நிறுவனம் 16 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் சில்லறை வர்த்தகம் மற்றும் லைஃப் ஸ்டைல் பொருள்கள் ஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத்தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இடத்தை அடைய நீண்டகாலப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு நிதியாண்டுகளாகவே இந்தியாவின் சில்லறை வர்த்தகம் மற்றும் லைஃப் ஸ்டைல் பொருள்கள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இந்த மாற்றத்தால் இத்துறையில் சர்வதேச அளவில் பெரும் வர்த்தக நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. டாம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (இந்தியா, வங்கதேசம், இலங்கை) கூறுகையில், “டாம்கோ நிறுவனம் 2016ஆம் ஆண்டில் 1,500 வகையான சில்லறை வர்த்தகம் மற்றும் லைஃப் ஸ்டைல் பொருள்களை ஏற்றுமதி செய்திருந்தது. 2017ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் 70 நகரங்களில் இயங்கிவந்த டாம்கோ நிறுவனம் 90 நகரங்களில் இயங்க ஆரம்பித்துள்ளது” என்றார்.

ஏற்றுமதி உயர்வால் இந்தியாவின் பல நகரங்கள் பயன்பெற்றுள்ளன. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் சில்லறை வர்த்தகம் மற்றும் லைஃப் ஸ்டைல் பொருள்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 45 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்ததாக உத்தரப் பிரதேசம் 21 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. இந்த இரு மாநிலங்களும் அதிகமாக அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்துள்ளன. அதேபோல தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்துள்ளன.

டாம்கோ வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களுக்கு வட அமெரிக்க நாடுகளில் தேவை மிக அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவின் சில்லறை வர்த்தகம் மற்றும் லைஃப் ஸ்டைல் பொருள்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்தியாவின் இத்தகைய தரமான தயாரிப்புகளுக்கான வரவேற்பு அடுத்தடுத்து பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்திக்கான தேவையும் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளது.

மேலும் கூடுதலாக, இந்தியாவின் லாஜிஸ்டிக் வசதிகள் கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது மேம்பட்டுள்ளது. லாஜிஸ்டிக் வசதிகளை மேம்படுத்த இந்திய அரசாங்கத்தின் முதலீடுகளும், தனியார் துறை முதலீடுகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இந்தக் காரணிகளெல்லாம் வெளிநாட்டுச் சந்தைகளில் இந்தியப் பொருள்களுக்கு வரவேற்பையும், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.

“இவற்றின் பலனால் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகச் சங்கிலி தொடர்ந்து சீரான வளர்ச்சி பெற்றுவருகிறது. ஒருவகையில் இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான புதிய வாய்ப்புகளை அதிகரித்துக்கொடுத்துள்ளது. இதன்மூலம் உள்ளூர் உற்பத்தி அதிகரிப்பதோடு, புதுமை காணல் மற்றும் சிறந்த நாணய வாய்ப்பு வளங்களையும் அதிகரித்துள்ளது” என்று டாம்கோ அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மேலும் சில அறிக்கைகளின்படி எல்லாவிதமான பொருள்களும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள் ஆகியவை தான் ஏற்றுமதியில் பெரும்பங்கைக் கொண்டுள்ளன. வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் 39 சதவிகிதமும், குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள் 33 சதவிகிதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல எல்லாப் பொருள்களுக்கும் ஏற்றுமதித் தேவை அதிகரித்துள்ளது என்று கூற இயலாது. குறிப்பாக இந்தியத் தயாரிப்பு ஆடைகள் மற்றும் காலணிகள் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதம் மற்றும் 1 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஆடைகள் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை கடுமையாகப் பாதித்துள்ளன. இக்ரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜெயந்தா ராய் இதுகுறித்து மணி கண்ட்ரோல் ஊடகத்திடம் கடந்த வாரம் பேசுகையில், “சென்ற 2017ஆம் ஆண்டு நவம்பரில் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றமே இத்துறை எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்றாகும். அந்நியச் செலாவணி மதிப்புகளைப் பொறுத்தே இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறன் அமைகிறது. புதிய வரி நடைமுறையில் சிக்கல்களைச் சமாளித்து, சர்வதேச போட்டிகளை எதிர்கொண்டால் மட்டுமே இந்திய ஜவுளித் துறையின் வளர்ச்சி மேம்படும்” எனத் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தடுமாறி வந்த ஆடை ஏற்றுமதித் துறை 2017ஆம் ஆண்டில் நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் சற்று வளர்ச்சியைக் கண்டுள்ளது. அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6 முதல் 20 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய சந்தையாகத் திகழ்கிறது. இந்தியாவின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கு 2013-14 நிதியாண்டில் 12 சதவிகிதத்திலிருந்து 2016-17 நிதியாண்டில் 23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்த அளவு 18 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. மேலே கூறியது போல சில பொருள்கள் ஏற்றுமதியில் சிறந்த சந்தைப் பங்கை கொண்டுள்ளன. சிலவற்றின் வளர்ச்சி குறைந்தும் வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தின் இலக்கு ஜிடிபி மதிப்பில் எவ்வாறு 40 சதவிகிதமாக அதிகரிக்கப் போகிறது? அதற்காக எந்த மாதிரியான செயல் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: குரியஸ்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon