மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - பூண்டு தொக்கு; கேழ்வரகு கூழ்!

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி - பூண்டு தொக்கு; கேழ்வரகு கூழ்!

பசியின்மை, வயிறு மந்தம், வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றுக்கு கைகண்ட மருந்து இஞ்சி - பூண்டு தொக்கு. இதைச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள் - ஒரு கிண்ணம், உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

இரும்புக் கடாயில், எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கைவிடாமல் கிளறவும்.

சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.

சூப்பரான இஞ்சி - பூண்டு தொக்கு ரெடி.

மருத்துவப் பலன்கள்: பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்தது.

இன்று கூடுதல் சிறப்பாக வெயிலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் கேழ்வரகு கூழ் செய்வதை பற்றியும் காணலாம்.

தேவையானவை:

கேழ்வரகு - கால் கிலோ, கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா 25 கிராம், பொட்டுக்கடலை, கம்பு - தலா 100 கிராம், முந்திரி, பாதாம் - தலா 10, ஏலக்காய் - 5, பார்லி - 4 டேபிள்ஸ்பூன், நெய், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும். வெறும் வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு வறுக்கவும். இவற்றுடன் முளைகட்டிய தானியங்களையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் சூடுபடுத்தவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கிளறவும். சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும். இதனுடன் நெய், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

குறிப்பு: அனைத்துத் தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். நான்கு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.

கீர்த்தனா சிந்தனைகள்:

மஞ்சளா இருக்கிற எலுமிச்சையை பிழிஞ்சா வெள்ளையா சாறு வருது! வெள்ளையா இருக்கிற முட்டையை உடைச்சா மஞ்சளா கரு வருது! இப்படி தான் வாழ்க்கையும் வித்தியாசமானது! நாம ஒண்ணு நெனச்சா, அது ஒண்ணு நடக்குது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon