மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

விவசாயிகள் போராட்டம்: பணிந்தது மகாராஷ்டிர அரசு!

விவசாயிகள் போராட்டம்: பணிந்தது மகாராஷ்டிர அரசு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகாராஷ்டிர விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்கத் தயார் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கடந்த மார்ச் 6ஆம் தேதி நாசிக் நகரில் தங்களது பேரணியைத் தொடங்கினர். இந்திய கிஷான் சபா என்ற விவசாய அமைப்பு அறிவித்த இந்தப் பேரணிக்கு ஏராளமான விவசாய அமைப்புகள் ஆதரவு தந்து கலந்துகொண்டன. நேற்று முன்தினம் இரவு கண்ணாப்பட்டி மைதானத்தில் தங்கி ஓய்வு எடுத்த விவசாயிகள் நேற்று காலை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதால், அவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக நேற்று முன்தினம் இரவே தங்கள் பேரணியை மீண்டும் தொடர்ந்தனர். நேற்று காலை ஆசாத் மைதானம் வந்தடைந்த அவர்களுக்கு உள்ளூர் மக்கள், டப்பா வாலாக்கள் போன்றோர் உணவு, குடிநீர் ஆகியவை வழங்கினர். இதேபோல், பேரணி நடைபெற்ற வழியெங்கும் பொதுமக்கள் விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் போன்றவை அளித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

சுமார் 180 கிலோமீட்டர் பயணித்த அவர்கள் நேற்று மும்பையை அடைந்தனர். புனே நகரில் தொடங்கும்போது 30 ஆயிரமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை, மும்பைக்கு வந்தபோது, 50 ஆயிரத்தைத் தொட்டது. மும்பைக்கு நுழைந்த விவசாயிகளைச் சந்தித்து சிவசேனா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் இந்தப் பிரமாண்ட பேரணி, மக்கள் சக்திக்குச் சிறந்த உதாரணம். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் பக்கம் காங்கிரஸ் நிற்கும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அகங்காரம் பார்க்காமல் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, விவசாயிகளின் பெரும்பான்மையான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இது தொடர்பாக அவர்களுக்கு எழுத்துபூர்வமான வாக்குறுதிகள் அளித்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். அரசின் உத்தரவாதத்தை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon