மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

அதர்வா படத்தில் இந்துஜா

அதர்வா படத்தில் இந்துஜா

‘என் குழுவினர் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த நடிகை இந்துஜா’ என்று பூமராங் படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துவரும் படம் பூமராங். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவருகிறார். தற்போது இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காகப் பிரமாண்ட செட் அமைத்துப் படமாக்கப்பட்டு வருகிறது. ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இந்த செட் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் ‘மேயாத மான்’ இந்துஜா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் விடிவி நியூஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாயக் கருத்தைக்கொண்ட ஆக்ஷன் படம்தான் பூமராங். இந்தப் படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்தப் பாடலுக்காக முற்றிலும் வித்தியாசமான செட் அமைக்கலாம் என முடிவெடுத்து பிரமாண்டமான செட் அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் இருவரும் எனது இந்தக் கனவை அழகாகப் புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பான பாடலைத் தந்திருக்கிறார்கள். கலை இயக்குநர் ஷிவா யாதவின் பிரமாண்ட செட்டாலும், பிருந்தாவின் அசத்தலான நடன இயக்கத்தாலும் இந்தப் பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது. சுமார் 2,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் சிறந்த 100 நடனக் கலைஞர்களைக்கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேயாத மான் இந்துஜாவின் தேர்வு குறித்து தெரிவித்த அவர், “பூமராங் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் மேயாத மான் படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான். மிகவும் சவாலான கதாபாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும்போது என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜாதான். அந்த அளவுக்கு முதல் படத்திலேயே இந்தப் பெயர் வாங்கியது பெரிய விஷயம். திட்டமிட்டபடியே செயல் புரிந்ததால் படப்பிடிப்பு மிக வேகமாகவும் அருமையாகவும் நடந்து வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon