மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

நேபாள விமான விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

நேபாள விமான விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

வங்கதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து நேபாளத்துக்கு வந்த பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் உள்ளது. காத்மாண்டு நகருக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த யு.எஸ்.பங்களா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. வங்கதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து யு.எஸ்.பங்களா நிறுவனத்துக்குச் சொந்தமான பிஎஸ்-211 என்ற விமானம் நேற்று (மார்ச் 12) நண்பகல் 2.30 மணி அளவில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள கால்பந்து மைதானத்துக்குள் விழுந்து தீ பிடித்தது.

இந்த விமானத்தில் 67 பயணிகள், 4 விமானப் பணிக்குழுவினர் ஆகிய 71 பேர் பயணம் செய்தனர். தற்போது, விபத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

விமானம் விபத்தில் சிக்கியதில் 38 பேர் உயிரிழந்தனர் என நேபாள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 23 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 10 பேரின் நிலை என்னவென்று இதுவரையில் தெரியவில்லை என போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே 50 பேர் உயிரிழந்தனர் எனவும் சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டு உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 33 பேர், வங்கதேசத்தைச் சேர்ந்த 32 பேர், மாலத்தீவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் பயணித்துள்ளனர். நேபாளத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என்றும் அவர்கள் விடுமுறைக்கு தங்கள் சொந்த வீட்டுக்குத் திரும்பியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon