மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

காதல் ‘களரி’யில் கிருஷ்ணா

காதல் ‘களரி’யில் கிருஷ்ணா

ஒவ்வொரு படத்துக்கும் தனது மாறுபட்ட நடிப்புத் திறனை வெளிப்படுத்த விரும்பும் கிருஷ்ணா, தற்போது நடித்திருக்கும் ‘களரி’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல், ஒரு படத்தின் கதாபாத்திரத் தன்மையை அறிந்து இணை நடிகராகவும் நடித்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திவருபவர் கிருஷ்ணா. மாரி 2, கிரகணம் ஆகிய படங்களில் நடித்துவரும் அவர், கிரண் சந்த் இயக்கத்தில் உருவாகிவரும் களரி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறும் காதல் மெலடி பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.

‘கெடையா கெடக்குறேன்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை இசையமைத்துப் பாடியுள்ளார் இசையமைப்பாளர் விவி பிரசன்னா. பிரசன்னாவுடன் இணைந்து வைசாலி பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கான மெட்டு சண்டிவீரன் படத்தில் இடம்பெற்ற ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடலை நினைவுபடுத்தினாலும் பாடலாசிரியர் முத்து விஜயன் தன்னுடைய வரிகளால் அந்தப் பாடலை மறக்கடிக்கச் செய்திருக்கிறார்.

கெடையா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய...

நடையா நடக்குறேன் அடி ஒனக்கு துணையாக...

உன்ன நான் பார்த்ததும் ஏறுது காய்ச்சலே..

கண்ணுல காதலின் எட்டுக்கால் பாய்ச்சலே...

எனப் பல்லவியில் ஒலிக்கும் பிரசன்னாவின் குரலை அடுத்து சரணங்களில்,

ஊதாங்குழல் வெச்சு உள் நெஞ்சுல புது உற்சாகத்தை திணிச்சாயே...

கோடை மழை போல என் காட்டில் தினம் நீயே...

ஆளில்லா வீதியில் ஆர்வமாய் பார்க்கிறாய்...

நூலில்லா ஆசையை வேர்வையில் கோர்க்கிறாய்...

இன்று உன் கன்னமும் அட என் கன்னமும் சின்ன முத்தங்களால் நிறையாதா...

என்பன போன்ற வரிகளில் ஒலிக்கும் வைசாலியின் குரல், மெலடி ரகமாக உருவாகியிருக்கும் இந்தக் காதல் பாடலுக்கு வலு சேர்க்கிறது.

'அலுங்குறேன் குலுங்குறேன்' ரக மெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் எனப் பாடலை கேட்கையில் கருத முடிகிறது.

கெடையா கெடக்குறேன் லிரிக்கல் வீடியோ

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon