மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ஐஏஎஸ் அதிகாரிகள் ஊழல்வாதிகளா? - ஆய்வு!

ஐஏஎஸ் அதிகாரிகள் ஊழல்வாதிகளா?  - ஆய்வு!

‘சொந்த மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிக ஊழல் செய்தவர்களாக உள்ளனர்’ என்று சமீபத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள பெர்கெலி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘சமூக பிரபலம் மற்றும் அதிகாரத்துவ செயல்திறன்’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டன. குவோ சூயு, மரியானி பெர்டிராண்ட், ராபின் பர்கீஸ் ஆகியோர் கொண்ட அந்தக் குழு வெளியிட்டுள்ள இந்த ஆய்வின் முடிவில், சொந்த மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடு, இதர மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை விடக் குறைவாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘அதிகாரிகள் தங்கள் சொந்த மாநிலங்களில் பணியாற்றுவதால் மக்களுடனான அவர்களின் தொடர்பு எளிதாகிறது. இதனால் அவர்களின் செயல்பாடும் அதிகரிக்கிறது. ஆனால் இதற்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. இத்தகைய அதிகாரிகளை அரசியல்வாதிகள் எளிதில் வளைத்து விடுகின்றனர். சமூகத்தில் உள்ள அவர்களது தனிப்பட்ட தொடர்புகளையும் கண்டறிந்துவிடுகின்றனர். இதன்மூலம் அவர் லஞ்சம் பெறுவார் என்பதும் தெரிந்துவிடுகிறது. இதர மாநிலத்தில் பணியாற்ற இவர்கள் விரும்புவதில்லை. இதிலும் அரசியல் குறுக்கீடுகள் உள்ளது. கர்நாடகா, குஜராத், பீகாரில்தான் அதிகளவில் எதிர்மறையான விளைவுகள் உள்ளூர் அதிகாரிகள் மூலம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்கள்தான் அதிக ஊழல் நிறைந்த மாநிலங்களாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘எதிர்மறையான விளைவுகள் கிட்டத்தட்ட இல்லாத மாநிலங்களாக பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. உள்ளூர் அதிகாரிகள் பலர் பொது சேவையில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்ற விரும்புகின்றனர். 2018 பிப்ரவரி மாதம் வரை 17 சதவிகித ஐஏஎஸ் அதிகாரிகள் தனியார் நிறுவன இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர்’ என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon