மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 மா 2018

தமிழ் சினிமா சுத்திகரிக்கப்படுமா, சுழலுக்குள் மூழ்குமா?

தமிழ் சினிமா சுத்திகரிக்கப்படுமா, சுழலுக்குள் மூழ்குமா?

திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 14 - குறுந்தொடர்

இராமானுஜம்

தமிழ்த் திரையுலகம் கடந்த ஐம்பதாண்டுகளில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியபின் திரையிடுவது எளிமையாக இருக்கிறது. தியேட்டரில் கல்லா நிரம்புவது கடினமாக உள்ளது. தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் தொழில் வளர வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பிரச்சினையை அணுகி நேருக்கு நேர் அமர்ந்து பேசிவிட்டால் எல்லா பிரச்சினைகளுக்கும் சில மணி நேரங்களில் சுமுகமான முடிவு எட்டப்படும்.

வியாபாரத்தில் விட்டுக்கொடுத்தலும், லாப நஷ்டங்களை நாணயத்துடன் பகிர்ந்துகொண்டு தொழில் பயணத்தில் நீண்ட வருடங்கள் ஒன்றாகப் பயணித்த விநியோகஸ்தர்களும் திரைப்பட அதிபர்களும் கோலோச்சிய காலம் முடிவுக்கு வந்தது டிஜிட்டல் அறிமுகமான 2005ஆம் ஆண்டில்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் கிடைத்த ஒரே நன்மை, குறைவான செலவில் (பிரின்ட் செலவுடன் ஒப்பிடும்போது) சிரமமின்றி அதிக திரைகளில் படங்களைத் திரையிடும் வாய்ப்பு மட்டுமே. அதுவே இன்றைக்குச் சினிமா சீரழிவுக்குக் காரணமாகிவிட்டது என்கின்றனர் திரைத் துறையினர்

டிஜிட்டல் சினிமா ஏற்கப்படாதபோது அதைத் தமிழகத்தில் கொண்டு சேர்க்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டது மிட் வேலி, பிரமிட் சாய்மீரா, கலசா என்கிற மூன்று நிறுவனங்கள். பங்கு வர்த்தகம் மூலம் நிதி திரட்ட பிரமிட் சாய்மீரா நிறுவனம் எந்தவித நிபந்தனைகளும் இன்றி தியேட்டர்களைக் குறைந்த கால குத்தகைக்குத் தமிழகத்தில் எடுக்கத் தொடங்கிய கால கட்டம். அதிகமான தியேட்டர்கள் கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக B, C சென்டர்களில் அதிகளவில் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்தனர். தியேட்டர்களுக்குப் படங்களின் தேவை அதிகம் ஏற்பட்டதால் சாய்மீரா அதிக விலை கொடுத்து படங்களை வாங்கத் தொடங்கியது. தரமற்ற படங்களைக்கூட அதிக விலை கொடுத்து வாங்கி ஷிப்டிங் சென்டரைக்கூட ரிலீஸ் சென்டர் நிலைக்கு உயர்த்தினர்.

இடைத்தரகர்கள், தவறான மதிப்பீடு, நிர்வாக செயல்பாடுகள் காரணமாக தமிழ்த் திரையுலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த பிரமிட் சாய்மீரா பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. குறுகிய காலத்துக்குள் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என அனைத்து இடங்களிலும் அதிகமான திரைகளை நிர்வகிக்கும் நிறுவனமாக வளர்ந்த இந்திய நிறுவனம் பிரமிட் சாய்மீரா, அதன் வளர்ச்சி குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. குறிப்பாகத் தமிழக திரையரங்கு தொழிலை பாதித்தது. புதிய படங்களைத் திரையிடும் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஷிப்டிங் தியேட்டர்களை அதன் உரிமையாளர்களே மீண்டும் நடத்த வேண்டிய நிலை வந்தது.

ஏற்கெனவே படங்களின் விலைகளை சாய்மீரா உயர்த்திவிட்டுச் சென்றதால் அதற்குக் குறைவான படங்களை விநியோகஸ்தர்களால் வாங்க முடியவில்லை. தயாரிப்பாளரிடம் படம் வாங்கிக் கொடுத்த விலைக்கு எம்.ஜி முறையில் படத்தைத் திரையிட வேண்டிய கட்டாயம் விநியோகஸ்தருக்கும், புதிய படங்களை எப்படியாவது திரையிட வேண்டிய கெளரவ நிர்பந்தம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஏற்பட்டது. கொடுத்த எம்.ஜி பணத்தை முதல் மூன்று நாள்களில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலிக்கத் தொடங்கினர் தியேட்டர் உரிமையாளர்கள். அனைத்துப் படங்களுக்கும் இது நடைமுறை சாத்தியமில்லாதபோது பெரும் நஷ்டத்தைச் சந்தித்தத் திரையரங்குகள், படிப்படியாகத் தனிநபர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. டிஜிட்டல் சினிமா உபகரணங்களைத் தயாரிக்கும் மிட் வேலி (Mid Valley) என்ற வெளிநாட்டு நிறுவனம், பிரமிட் சாய்மீரா, கியூப், UFO நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் சினிமா உபகரணங்களைச் சந்தைப்படுத்தவும், அதன்மூலம் தமிழ் சினிமா திரையிடலைக் கையகப்படுத்தவும் நீண்ட கால திட்டத்துடன் களமிறங்கியது.

மிட் வேலி, பிரமிட் சாய்மீரா, கலசா ஆகிய நிறுவனங்கள் சரிவுக்குப் போன பின் கியூப் நிறுவனத்தை ஆலமரமாக வளர்த்துவிட்டது. அடுத்த கட்டமாக தனது ஆதிக்கத்துக்கு இடையூறாக இருக்கக்கூடிய அமைப்புகளைப் பலவீனப்படுத்த கியூப் தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமே திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு இடையிலான மோதல்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் இவற்றில் கந்து வட்டிக்காரர்களின் ஆதிக்கம், தனிநபர்களின் நாட்டாமைத்தனம் இவற்றை ஒழித்து முறைப்படுத்தத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்திருக்கும் ஆயுதமே மார்ச் 16 முதல் படப்பிடிப்பு ரத்து எனும் அறிவிப்பு. சங்கத்தின் முன்னாள் கௌரவச் செயலாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களுக்குத் தொழில் ரீதியாக ஒத்துழைப்பதில்லை என்கிற அதிரடி முடிவு.

எதை நோக்கி தமிழ் சினிமா... நாளை காலை 7 மணி அப்டேட்டில்.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 12 மா 2018