மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 மா 2018

தமிழ் சினிமா ஜனநாயகப்படுத்தப்படுமா?

தமிழ் சினிமா ஜனநாயகப்படுத்தப்படுமா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 12

இராமானுஜம்

திரு ராமானுஜம் அவர்களுக்கு வணக்கம். நான் சிவஸ்ரீ. நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. இருந்தும் உங்கள் கட்டுரைக்கு பதில் சொல்லக் கடமைபட்டிருக்கேன். காரணம் உங்கள் கட்டுரை எங்களைப் பற்றியது.

நீங்கள் ஆணித்தரமாகக் கூறியது எங்களைப் போன்ற சிறு திரையரங்க உரிமையாளர்கள் அவர்களிடம் சிக்கி அல்லோலப்படுகிறோம் என்று. அது உண்மையில்லை. மாறாக, அவர்கள் எங்களை ஒதுக்கி உங்கள் திரையரங்கை நீங்களே பாருங்கள் என்று கூறினால், ஆரம்பத்தில் இனிப்பதாக நினைக்கும் நாங்கள், அதிகபட்சம் இரண்டு மாதத்தில் திரையரங்கை மூடிவிடுவோம். அதன் காரணத்தையும் கூறுகிறேன் கேளுங்கள். தனியாக விடப்பட்டால் நாங்கள் படத்துக்காக செல்லும்போது எம்.ஜி.யே (Minimum Guarantee) உதயமாகும். அதுவும் சாதாரண எம்.ஜி. அல்ல. உதாரணமாக ஒரு லட்சம் வசூல் ஆகும் திரையரங்கிற்கு, ஐந்து லட்சம் கேட்கும் தயாரிப்பாளரகள் கவனித்துப் பாருங்கள் (நான் டிஸ்ட்ரிப்யூட்டரை சொல்லவில்லை. அதன் காரணம் பின்னர் சொல்கிறேன்). ஆக, ஒரு லட்சம் வசூல் ஆகும் திரையரங்கிற்கு ஐந்து லட்சம் எம்.ஜி. போட்டால் என்ன ஆகும்? தானாகத் திரையரங்கம் மூடப்படும். அதுதான் உண்மையில் நடக்கும்.

அப்பறம், அவர்கள் எங்களைக் கைக்குள் வைத்து ஆட்சி செய்கிறார்கள் என்கிறீர்கள். அது சுத்தப் பொய். நாங்கள் வாலன்டரியாக அவர்கள் கைக்குள் உள்ளோம். காரணம், இப்போது இருக்கும் இந்த சினிமாவைக் காப்பாற்றுபவர்கள். அதாவது, விசிடி கேபிள் டிவி மற்றும் ஆன்லைன் வந்த பின்னர், திரையரங்க வருகையாளர்கள் ஆண்கள் நூறிலிருந்து 20 சதவிகிதமாகவும், பெண்கள் நூறிலிருந்து 2 சதவிகிதமாகவும் குறைந்திருக்கின்றனர். இதுதான் சத்தியமான உண்மை. அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் பழைய வருமானம் எதிர்பார்த்ததே ஆரம்ப வீழ்ச்சி. உண்மையில், தயாரிப்பாளர் வருமானத்திற்கு ஏற்ற படம் எடுத்திருந்தால் இவ்வீழ்ச்சி ஓரளவு தடைபட்டிருக்கும். அதான் நடக்கவில்லையே. சரி அதே அளவிற்கு இருப்பார்கள் என்று பார்த்தால், அதன் பின்புதான் பல கோடி கலாச்சாரம் வந்தது. முதலில் தரைமட்டத்தில் தாறுமாறாக இருக்கும் திரையரங்குகள் என்ன ஆகும்? இரண்டாயிரம் ஆயிரமாகக் குறைந்தது. ஆயிரமும் ஐநூறாகக் குறையும் நிலைமை வந்தது. அப்போதுதான் நீங்கள் கூறும் சினிமா எதிரி; நாங்கள் கூறும் எங்கள் சினிமாவைக் காக்க வந்த ஆபத்பாந்தவர்கள் என்ற இந்த நான்கைந்து பேர் குரல் கேட்டது. ‘டே தம்பிகளா மீதி கொஞ்ச பேரும் தியேட்டரை நிறுத்தி, மீதி இருக்கும் சினிமாவையும் அழித்துவிடாதீர்கள். வாங்க சேர்ந்தே சினிமாவைக் காப்போம்’ என்று சுத்தமாக அழிந்து, ரொம்ப ரொம்ப கொஞ்சமாக மீதி இருக்கும் டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்குக் கை கொடுத்துக் காப்பாற்றினார்கள்.

ஐயா சாமி சின்ன தியேட்டருக்கு ஏதோ மூச்சு மட்டும் வந்து போயிட்டு இருக்கு. நீ ஏதோ உசுப்பேத்தி அவங்களும் விட்டுட்டு போயிட்டாங்கன்னா, சத்தியமா ஆயிரமும் ஐநூறு ஆகிடும். அந்த வேலையை மட்டும் பார்த்திடாத. சினிமா பாவம் உன்னை விடாது.

உங்களுக்கு இந்த பதிவு வருமான்னு தெரியாது. அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் எங்களுக்குள்ளாவது தெரிந்து ஆறுதல்பட்டுக்கொள்கிறோம்

நன்றி, சிவஸ்ரீ.

இராமானுஜம் விளக்கம்:

ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்தத் தொடர், எந்த ஒரு தனி மனிதர் பற்றியதும் அல்ல. சினிமா என்பது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்களின் கூட்டு உழைப்பில் தயாராகிறது.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு, வெளியிடத் தயாராகும் படத்தை எப்போது ரிலீஸ் செய்வது, எதன் அடிப்படையில், எத்தனை திரையரங்கில் என்பதை குறிப்பிட்ட சிலர் தீர்மானிக்கும், மேலாதிக்கம் செய்யும் தீவிரத்தன்மை கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா வியாபாரத்தில் நிலைகொண்டுள்ளது. ஆதிக்கம் செய்பவர்களுக்கு அடங்கிப் போகவில்லை என்றால் அந்தப்படம் முடக்கப்படுகிறது. இதற்கு சங்கங்கள் துணை போனதும் நடந்திருக்கிறது. தயாரிப்பாளர் தன் படைப்பை சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இங்கு இல்லை.

சாமான்ய விநியோகஸ்தர் முதல் சர்வ வல்லமை பொருந்தியவர் வரை படங்களை வாங்கப் போட்டி போட்டனர். ஆரோக்கியமான வியாபாரமும், வசூலும் தமிழ் சினிமாவில் இருந்தது. செங்கல்பட்டு, கோவை, சேலம் ஏரியாக்களில் அட்வான்ஸ் மூலம் திரையரங்குகளில் திரையிடும் விநியோகஸ்தர், அதே படத்துக்கு திருச்சி, நெல்லை, மதுரை ஏரியாக்களில் தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி.கேட்பது இப்போதும் நடக்கிறது. ஒரே படத்திற்கு ஏன் இந்த வித்தியாச அணுகுமுறை? இவைகளை சரிசெய்ய வேண்டிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயலற்று இருப்பது, சுயநல நோக்குடன் இங்கு செயல்படுவது ஏன்?

சிண்டிகேட் அமைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கிய படத்திற்கு லட்சக்கணக்கில் அட்வான்ஸ் கொடுப்பேன் எனக் கூறுவது, சம்மதிக்காதவர்களின் படங்களைத் திரையிட மாட்டோம் எனக் கூறும் போக்கு சேலம் ஏரியாவிலும், கரூரிலும் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. இவற்றுக்கு என்ன காரணம் என்பதை விவாதப் பொருளாக்குவதே இத்தொடரின் நோக்கம். தொழிலை முடக்குவது எங்கள் நோக்கமல்ல. தொடர் கட்டுரை பற்றி எதிர்மறையான கருத்து தெரிவித்து வாட்ஸ் அப்பில் வந்த பதிவை நேர்மையுடன் மேலே பதிவு செய்கிறோம். இத்தொடர் பற்றி வருகின்ற எந்தப் பதிவையும் மறைக்காமல் வெளியிடத் தயாராக உள்ளோம். திரைப்பட தொழில் ஜனநாயகப்படுத்தபட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

குறிப்பு:

இராமானுஜம் அவர்களுக்கு சிவஸ்ரீ எழுதி அனுப்பிய கடிதத்தில் பிழைதிருத்தம் மட்டும் செய்து பிரசுரித்திருக்கிறோம். இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும். – ஆசிரியர்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 10 மா 2018