மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

கழுத்து எலும்புகளையும் பாதுகாக்கும் ஹெல்மெட்!

கழுத்து எலும்புகளையும் பாதுகாக்கும் ஹெல்மெட்!

இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கொண்டு தான் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். ஹெல்மெட் அணிவது தலையை மட்டுமல்லாமல் கழுத்து எலும்புகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என சமீபத்திய அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிவதினால் விபத்தின் போது தலையில் அடிப்பட்டுப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். அதேநேரத்தில் கழுத்து எலும்பு முறிவதற்கு ஹெல்மெட்டும் ஒரு காரணம் என்ற கருத்தும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி கடந்த 2010 முதல் 2015ஆம் ஆண்டுவரை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 1061 பேரின் மருத்துவ குறிப்புகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

விபத்தின்போது 323 பேர் ஹெல்மெட் அணிந்தும், 738 பேர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஹெல்மெட் அணிந்திருந்த 7.4 சதவீதம் பேருக்கு கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாதவர்களில் 15.4 சதவீதம் பேருக்கு கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அதிகளவு கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதன்மூலம், ஹெல்மெட் அணிவது விபத்து காலங்களில் தலைக்கு மட்டுமின்றி கழுத்து எலும்புகளுக்கும் பாதுகாப்பானது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொண்டிருந்தாலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தகவலை மருத்துவ ஆய்வுக் குழு தலைவர் பால் எஸ்பேஸ் என்பர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் நரம்பியல் தொடர்பான "ஸ்பைன்" அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon