மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

கட்சி அலுவலகத்தில் குடியேறிய மாணிக் சர்க்கார்

கட்சி அலுவலகத்தில் குடியேறிய மாணிக் சர்க்கார்

திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் சொந்த வீடு இல்லாததால், கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் குடியேறியுள்ளார்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. சுமார் 20 ஆண்டுகள் முதல்வராக மாணிக் சர்க்கார் பதவி வகித்தார். 5 முறை முதல்வராகப் பதவி வகித்தாலும் அவருக்கென சொந்தமாக வீடு கிடையாது. நடந்துமுடிந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மாணிக் சர்க்கார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவரது வங்கிக் கணக்கில் ரூ. 2,410 மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது கையிருப்பாக வெறும் ரூ.1,520 மட்டுமே வைத்திருந்தார். முதல்வருக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையை கட்சிக்கு வழங்குவதையே அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்தியாவின் ஏழை முதல்வர் என அழைக்கப்படும் இவர், தனது மனைவியின் ஓய்வூதிய பணத்தில் குடும்பத்தை நடத்திவருகிறார்.

தற்போது தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அரசு வீட்டைக் காலி செய்துவிட்டு அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் கடந்த புதனன்று குடியேறியுள்ளார்.

இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஒருவர், “தனது உடைமைகள் மற்றும் சில புத்தகங்களுடன் கட்சி அலுவலகத்தில் உள்ள சிறிய அறையில் அவர் குடியேறியுள்ளார். உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் கூடுதலாக அந்த அறையில் வைத்துத் தரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உதய்ப்பூரில் பிறந்த மாணிக் சர்க்கார் அங்கிருந்த தனது பூர்வீக சொத்துக்களையும் கட்சிக்கே நன்கொடையாக வழங்கிவிட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon