மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

உஷாவுக்கு நீதி கேட்கும் மனித உரிமை ஆணையம்!

உஷாவுக்கு நீதி கேட்கும் மனித உரிமை ஆணையம்!

திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த கர்ப்பிணி பெண் சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சி திருவெறும்பூரில் தம்பதியினர் சென்ற இருசக்கர வாகனத்தைக் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில், வாகனத்திலிருந்து விழுந்த கர்ப்பிணிப் பெண் வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் குறித்து, உரிய விசாரணை நடத்தி எட்டு வாரங்களுக்குள் விரிவான விளக்கமளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கும், காவல் துறை டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண் உயிரிழப்புக்குக் காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காயமடைந்த உஷாவின் கணவர் ராஜாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், உஷாவின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற விவரங்களை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் ஆய்வாளருக்கு 50 சதவிகித சம்பளம் வழங்கப்படும். துறை ரீதியாக விசாரணை நடைபெறும்போது, ஆய்வாளர் வேண்டும் என்றே செய்யவில்லை, யதார்த்தமாக எட்டி உதைத்ததில், இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது என்று கூறுவார். இதையும் ஏற்றுக்கொண்டு காவல் துறை மூன்று மாதங்களுக்குள் அவருக்குப் பணி ஆணை வழங்கும். பணியில் சேர்ந்த பிறகு பணியிடை காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மீதி 50 சதவிகித சம்பளமும் வழங்கப்படும். இந்த மூன்று மாதங்கள் ஏதோ விடுமுறையில் இருந்தது போன்று நினைத்துக்கொள்வார். மூன்று மாத கர்ப்பிணி பெண்ணைக் கொன்றவருக்கு இதுதான் தண்டனையா?’ எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுமட்டுமல்லாமல், ‘டாஸ்மாக் மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அறைந்து செவிடாக்கிய பாண்டியராஜனுக்குப் பதவி உயர்வு வழங்கியது போல, இவருக்கும் பதவி உயர்வு வழங்க மாட்டார்கள்’ என்பது என்ன நிச்சயம் எனச் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon