மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா Vs பெரியார்

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா Vs பெரியார்

ஆழி செந்தில்நாதன்

பெரியார் சிலைகளை உடைக்கக் கிளம்பிய எச்.ராஜா, மறுநாளே பல்டி அடித்தார் என்பதோடு அந்தப் பிரச்சினை முடியவில்லை. தமிழ்நாடே திருப்பி அடித்ததில் நிலைகுலைந்துபோன ராஜா, வருத்தம் தெரிவிக்கும் பாங்கில் முகநூலில் பதிவிட்டபோது, மீண்டும் ஓர் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். “தமிழகத்தில் தேசியம், தெய்விகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது” என்று ராஜா குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் ஒரு பார்வார்டு பிளாக் பிரிவு கண்டனம் தெரிவித்தது என்பது வேறு கதை.

அமித் ஷாவின் அபகரிப்பு வேலைகள்

பாஜக தலைவர் அமித் ஷாவின் சோஷியல் இன்ஜினீயரிங் வியூகத்தின் ஒரு வெளிப்பாடுதான் ராஜா வெளிப்படுத்தும் இந்த தேவர் பாசம் என்பது தெளிவாகத் தெரிகிறது, பாஜகவைப் பார்த்து பலரும் ‘பயப்படும்’ இடம் இதுதான். அமித் ஷா என்கிற பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி, ஊர் ஊராக வந்து கொத்துக்கொத்தாக மக்களையும் கட்சிகளையும் வாங்கிவிடுகிறார் என்பது நாடறிந்த உண்மைதான். திரிபுராவில் காங்கிரஸ் கட்சியையே விலைக்கு வாங்கிவிட்டார்கள். வடகிழக்கில் பல முன்னாள் தேசிய விடுதலை அமைப்புகளையும் பழங்குடியினர் நலனுக்கான கட்சிகளையும் பாஜக விழுங்கியிருக்கிறது. அதற்கெல்லாம் முன்னதாக, உத்தரப் பிரதேச தேர்தலில் தலித், பிசி சமூகங்களைப் பிரித்தாண்டு வெற்றிபெற்றார்கள்.

தமிழ்நாட்டிலும் நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள், கொங்கு வேளாளர்கள், முதலியார்கள் மத்தியில் பாஜக வேலை செய்வதை நாம் பார்க்கிறோம். புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி... நாடார், கொங்கு வேளாளர், முதலியார் சமூகங்களைச் சேர்ந்த சில பெருந்தலைகள் பாஜக பக்கம் சரிகிறபோது, தமிழ்நாட்டில் பாஜகவின் வியூகம் வெற்றிபெறுகிறதோ என்கிற ஐயம் உருவாவது தவிர்க்க முடியாதது. அத்துடன், அதிமுகவே பாஜகவுக்கு விலைபோய்விட்டது என்று எல்லோரும் பேசுகிறோம்.

இங்கேதான் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவின் வியூகம் வெற்றிபெறுமா?

தமிழ்நாட்டின் ஐம்பதாண்டுக் கால திராவிடக் கட்சிகளின் வியூகங்கள் பற்றி ஒரு குறிப்பிட்ட நோக்கிலான வியாக்கியானத்தை இங்கே நான் முன்வைக்க விரும்புகிறேன். இந்த வியாக்கியானத்தின் மூலமாக இந்தப் போக்குகளை நான் ஏற்கிறேன் என்று பொருட்படுத்திக்கொள்ள வேண்டாம். மாறாக பாஜகவின் கனவு இங்கே பலிக்காமல் போவது ஏன் என்பதற்கான விளக்கமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

பாஜகவுக்கு அப்பன்கள்

சோஷியல் இன்ஜினீயரிங் என்கிற சமூக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் பாஜகவுக்கு அப்பன்களாக திராவிடக் கட்சிகள் இருந்துவருகின்றன என்பதை எச்.ராஜாக்கள் அறிய வேண்டும். இல்லையென்றால் தாங்கள் நோட்டாவுக்குக் கீழாக வாக்கு வாங்கும் ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும். ஏன், ஓபிஎஸ் – ஈபிஎஸ்களைக்கூட நீண்ட காலத்துக்கு வேலை வாங்க முடியாமல் போய்விடும்.

திமுக அறுபதுகளின் பிற்பாதியில் ஆட்சிக்கு வந்தபோது அது முதலியார்கள், நாயுடுகள் உள்ளிட்ட ஒரு சில சாதிகளின் ஆதிக்கத்தில்தான் இருந்தது என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதில் சில நியாயங்களும் இருந்தன. அப்போது திமுகவின் செல்வாக்கு பெருமளவு வடக்கு, மத்திய பகுதிகளில்தான் அதிகமிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அது தமிழ்நாட்டின் அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் வேர்கொள்ளத் தொடங்கியது. எழுபதுகளில், எம்.ஜி.ஆர். தனது கட்சியை வலுப்படுத்தியபோது, அவர் திமுகவிலிருந்து வந்தவர்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை. மாறாக தெற்கில் முக்குலத்தோரும் மேற்கில் கொங்கு வேளாளர்களும் அவரது கட்சியில் பெருவாரியாக இணைந்தார்கள். அதற்கு முன்பு தெற்கிலும் மேற்கிலும் கோலோச்சியிருந்த காங்கிரஸ், பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளின் பிடியிலிருந்து இந்த இரு பெரிய சமூகங்களுமே விடுபட்டு மெல்ல மெல்ல அதிமுகவிலும் திமுகவிலும் கரைந்தன. குறிப்பாக இதில் அதிமுக பலனடைந்தது.

ஜெயலலிதாவின் காலத்தில், சசிகலாவின் அரசியல் வியூகத்தில், இது முழுமையடைந்தது. இந்தக் கட்டத்தில், குறிப்பாக தெற்கில், முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் இடத்தை இரு கட்சிகளுமே பெறத் தொடங்கின. தேவர் குருபூஜைகள் போட்டிபோட்டு நடத்தப்பட்டன. பெரியார் அல்லது அண்ணாவுக்கும் தேவருக்கும் இடையிலான முரண்களைப் பேசுவதற்குப் பிற்காலத்தில் ஆளே இல்லை.

வன்னியர் இயக்க எழுச்சியும் திராவிட இயக்கங்களும்

தொண்ணூறுகளில் வன்னியர்கள், தலித் சமூகங்கள் மத்தியில் உருவான விழிப்புணர்ச்சி தொடக்கத்தில் இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் அசைத்துப் பார்த்தன. வன்னியர்களின் இடஒதுக்கீடு போராட்டம் வடதமிழ்நாட்டில் திமுகவின் கோட்டையை உலுக்கியெடுத்தது. 80களில் வன்னியர் சங்கப் போராட்டத்தை முடிந்தவரை ஒடுக்கப்பார்த்தார் எம்.ஜி.ஆர். புறக்கணிக்கப் பார்த்தது திமுக. இறுதியில் நடந்தது என்ன? மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவந்தது திமுக.

வன்னியர் சங்கத்திலிருந்து உருவான பாமக தனித்த அடையாளத்தோடு தன் பயணத்தைத் தொடங்கியது. ஆனால், தேர்தல் நிர்பந்தங்கள் காரணமாகவும் அதன் தலைவர் ராமதாஸின் ‘தனிப்பட்ட’ திட்டங்கள் காரணமாகவும், எந்த திராவிடக் கட்சிகளை எதிர்த்து பாமக தொடங்கப்பட்டதோ அதே கட்சிகளோடு கூட்டுவைத்துக்கொண்டது. இது பாமகவின் நிர்பந்தம் மட்டுமல்ல’ திராவிடக் கட்சிகளின் நிர்பந்தமுமாகும். இந்த இரு நிர்பந்தங்களும் இணைவதற்கான அரசியல் வெளி ஏற்கெனவே இங்கே இருக்கிறது. கழகங்களின் இந்த ‘நெகிழ்வுத்தன்மை’ காரணமாக, வடதமிழ்நாட்டில் திமுக, அதிமுகவின் உள்ளூர் தலைமைகளிலும் வன்னியர்கள் பெரும் ஏற்றமடைந்தார்கள். டாக்டர் ராமதாஸின் நோக்கம் ஒருவகையில் வெற்றி பெற்றுவிட்டது.

தலித் இயக்க எழுச்சியும் திராவிட இயக்கங்களும்

தலித் இயக்கத்தின் மாபெரும் எழுச்சியும்கூட இப்படித்தான் முதலில் திராவிட இயக்கத்தையும் கட்சிகளையும் உலுக்கியெடுத்தது. பெரியாரும் திராவிட இயக்கமும் உண்மையான சாதி ஒழிப்பு இயக்கங்கள் அல்ல என்கிற தலித் இயக்க விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்தார்கள் திக, திமுகவினர். சுமார் பத்தாண்டு காலத்துக்கும் மேலாக, விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சி, திமுக, அதிமுகவை மிரளவைத்தது. தெற்கே தேவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக தேவேந்திரர்களின் அரசியல் வெளியை கிருஷ்ணசாமி உருவாக்கினார்.

ஆனால், பிறகு என்ன நடந்தது? தொல் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் மெல்ல மெல்ல இருபெரும் கழகங்களை நோக்கியே நகர வேண்டியிருந்தது. அதுவரை தலித்களுக்கு முக்கியத்துவம் தராமலிருந்த கழகங்கள் திடீரென அந்த முக்கியத்துவத்தைத் தர தொடங்கின. ஒரு தலித் அமைச்சர் இருந்த அமைச்சரவைகளில் மூன்று தலித் அமைச்சர்கள் இடம்பெறத் தொடங்கினார்கள். பிறகு திராவிட – தலித் இயக்கங்களுக்கிடையில் ஒரு சமரசப் போக்கும் ஏற்பட்டது. இன்று அநேகமாக எல்லாப் பொதுப் பிரச்சினைகளிலும் இரு தரப்பினருமே இணைந்துதான் நிற்கிறார்கள்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை

காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் திமுகவைப் பிளந்தது என்பது வரலாறு. ஆனால், அதே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது திமுக. திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மாற்று என்று கிளம்பிய விஜயகாந்த் கட்சிக்கும் இதே நிலைமைதான். ஸ்டாலினை முன்வைத்து திமுகவைப் பிளந்து வெளியேறிய வைகோவின் இன்றைய லட்சியமே ஸ்டாலினை முதல்வராக ஆக்குவதுதானாம்.

அவ்வளவு ஏன்? பாஜகவோடு கூட்டணி வைக்காத ஒரு திராவிடக் கட்சி உண்டா? ராஜாஜியோடு அண்ணா கூட்டணி வைக்க முடியுமென்றால், இவை எல்லாமே சாத்தியம்தான். அதைப் போலவே தமிழ்நாட்டில் முதன்முதலில் சாதி கட்சிகளுக்கு அரசியல் அந்தஸ்தைக் கொடுத்தவரும் கருணாநிதிதான். இப்படியாக சோஷியல் இன்ஜினீயரிங், சிறு கட்சிகளைத் தம் வசப்படுத்துவது, அனைத்திந்தியக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்துகொள்வது போன்ற சித்து விளையாட்டுகளில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அளவுக்கு அதிகமாகவே அனுபவம் வாய்ந்தவர்கள்.

பெரியார் தந்த கொடை

இப்போது விஷயத்துக்கு வருவோம். திமுக, அதிமுகவினர் எப்படி இவ்வளவு பிரமாதமாக தங்களுடைய ‘எதிரிகளை’ தங்கள் வசப்படுத்துகிறார்கள்? அங்கேதான் பெரியார் வருகிறார். பெரியாரின் அரசியல் வெளி பார்ப்பனரல்லாதோர் அரசியல் வெளி. அவரது சமூக நீதி அரசியலின் இறுதி நோக்கம் சாதி ஒழிப்புதான் என்றாலும் அதன் முதல் கட்டம் என்பது அனைத்துச் சாதியினருக்குமான அரசியல், சமூக அதிகாரப் பகிர்வு என்பதுதான். இது ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது கட்சிக்கு அப்பாற்பட்ட அரசியல் வெளி.

பெரியாரிய அரசியல் வெளியில் இதன் காரணமாக எல்லோருக்கும் இடம் கிடைத்துவிடுகிறது. ஏன், நாளைக்குத் தமிழிசைக்கும் பொன் ராதாகிருஷ்ணனுக்கும்கூட இடம் கிடைத்துவிடக்கூடும். பெரியாரின் பார்ப்பனரல்லாதோர் அரசியல் தளம், பார்ப்பனர்களைத் தவிர மீதி அனைவருக்கும் இடமளித்துவிடுகிறது. அதேசமயம் அந்த வெளியை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் பார்ப்பனர்களுக்கும் இடமளிக்கும். எனவே, தமிழ்நாட்டில் பெரியாரிய அரசியல் வெளிக்கு வெளியே யாரும் இல்லை. பார்ப்பனர்கள் பெருவாரியாக தமிழ்நாட்டு அரசியல் வெளியிலிருந்து வெளியேறிய பிறகும், ஜெயலலிதா அதற்குள் நுழைய முடிந்ததற்குக் காரணம் அதுவே.

எனவே, மேல்நோக்கி நகர விரும்புகிற எந்தச் சாதிக்காரருக்கும் இயல்பான முதல் இரு தேர்வுகளாக திமுகவும் அதிமுகவுமே ஆகிவிட்டன. இதற்கு மாற்றாகக் கட்சியை உருவாக்கியவர்கள் அனைவருமே குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளின் நலன்கள் அல்லது குறிப்பிட்ட அரசியல் அஜெண்டாக்களின் வரம்புகளைத் தாண்டிச் சிந்திக்க முடியாதவர்களாகவே ஆகிவிட்டனர். இதனால் இரு கழகங்கள் நீடித்து நிற்கின்றன. அது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளை வெறும் போட்டியாளர்களாகவே கருதி எப்போது வேண்டுமானாலும் தயக்கமின்றி அவர்களோடு கைகோத்துக்கொள்வதில் இவ்விரு கட்சிகளும் கைதேர்ந்தவை.

“வெற்றிடத்துக்குப் பிறகு?”

இங்கே வேறு ஒரு கேள்வி எழலாம். இதெல்லாம் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து நிலைமைகள். இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிற ‘வெற்றிடத்துக்குப் பிறகு’ இதே நிலைமை தொடருமா? திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இதே வலிமை அல்லது வியூகம் தொடர்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். அதே வலிமை அல்லது அதே சூழல் இல்லை என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், அதை பதிலீடு செய்கிற இடத்தில் பாஜக இல்லை என்பதுதான் முக்கியமானது. தமிழ்நாடு பாஜகவை ஆட்டத்திலேயே சேர்க்க மறுக்கிறது என்பதிலிருந்து அதுவே தெரியவருகிறது.

சொல்லப்போனால் திமுக, அதிமுகவுக்கு இன்று ஏற்பட்டிருக்கிற பிரச்சினைகள் வேறு விதமானவை. அவற்றுக்கு மாற்று வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த மாற்றை பாஜக, ரஜினி, கமல் எல்லாம் தர முடியாது. அன்புமணியும் சீமானும் தர முடியவில்லை.

திராவிடக் கட்சிகளின் இந்த “அனைத்தளாவிய அரவணைப்பையும் உள்ளீர்ப்பு வியூகத்தையும் உச்சபட்ச நெகிழ்வுத்தன்மையையும்” தாண்டிச் செல்கிற முயற்சியை இங்கே யாரும் எடுக்க முடியவில்லை. எனவே, இங்கே உருவாகிற எந்தக் கட்சியும் திராவிடக் கட்சிகளின் வருங்கால ஜூனியர் பார்ட்னர்களாகவே உருவாகின்றன. கம்யூனிஸ்ட்டுக்கு கம்யூனிஸ்ட்டாகவும் கார்ப்பரேட்டுக்கு கார்ப்பரேட்டாகவும் தம்மைத் தகவமைத்துக்கொள்கிற திமுகவின் பலம் இன்று குறைந்திருக்கிறது, ஆனால், அந்த பிளாட்பார்ம் அப்படியேதான் இருக்கிறது. ‘எந்தக் கொள்கையும் தேவையில்லை, என்னோடு சேர்ந்தால் உனக்கு எதிர்காலம் உண்டு’ என்பதை உறுதிப்படுத்துகிற அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், அடுத்த சட்டசபைத் தேர்தலுக்குள் சசிகலா வந்துவிட மாட்டாரா? தினகரனை குறைத்து மதிப்பிட முடியுமா?

பல களம் கண்ட தலைவர்கள்

இன்று பாஜக படிக்கிற சோஷியல் இன்ஜினீயரிங் பள்ளிக்கூடத்தில் முன்பு தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் என்பதை மறவாதீர்கள். அவர்கள் முத்துராமலிங்கத் தேவரையும் காமராஜரையும் எப்போதோ தங்களுடைய வளைவுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். இன்று பாஜக தமிழ்நாட்டில் அதிகபட்சம் ‘பிராமண சாதி பார்ட்டி’யாக மட்டுமே இருக்க முடியும். வலதுசாரி, இந்துத்துவ, கடைந்தெடுத்த திராவிட எதிர்ப்பாளர்களின் கட்சியாக அது இருக்க முடியும். பிற சாதியினர் மத்தியில் அவர்கள் வீசியிருக்கிற வலை இப்போது வெற்றிபெற்றிருப்பதாகத் தோன்றினாலும் அது நீடிக்கும் என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.

ஓரிரு கிருஷ்ணசாமிகளும் ஏ.சி.சண்முகங்களும் பாஜகவின் பக்கம் போகலாம். அதன் வெறுப்பரசியல் உள்ளூரளவில் சில கும்பல்களை உருவாக்கலாம். டெல்லியில் ஆட்சியில் இருக்கிற காரணத்தால், ஓபிஎஸ் ஈபிஎஸ்களை அவர்கள் அடக்கி ஆளலாம். ஆனால், இது எதுவுமே பாஜக தனது கட்சியைக் ‘கட்டமைக்க’ உதவாது. மாறாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய அரிப்புகளைச் சொரிந்து கொள்ளலாம், ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் மீது சேதாரங்களை வாரி இறைக்கலாம். பழிவாங்கலாம். சமூக நீதி வண்டியைத் தடம்புரளச் செய்யலாம். மாநில உரிமைகளைப் பறிக்கலாம். இருண்ட காலத்தைக் கொண்டுவரலாம். ஆனால், இவற்றினூடாக பாஜக தமிழர்களின் எதிரியாகவே மக்கள் மத்தியில் உருப்பெறுமே ஒழியே, தமிழர்களை அதனால் வெல்லவே முடியாது.

இவை எல்லாம் உள்ளூர் அரசியல் கட்சிகளை மீண்டும் துடித்தெழவே வழிவகுக்கும். இந்த முறை, பெரியார் சிலை விவகாரத்தில், ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாக ஒரு பெரிய அறிக்கையை – திராவிட எழுச்சி மடலை - வெளியிட்டார். டாக்டர் ராமதாஸின் அறிக்கை அற்புதமானதொரு மீள்வருகையைக் குறித்து நிற்கிறது. ராஜாவுக்கு நாக்கில் சனி என்றார் தினகரன். பெரியார் சிலைகளை உடைப்போம் என்று நேற்று முழங்கிய சீமானே, பெரியார் சிலைமீது கைவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என்று இன்று மிரட்டினார். பிராமணர் சங்கமே ராஜாவைக் கண்டிக்க வேண்டிய நிலைமை உருவாகியது. இறுதியில் பாஜக மாநிலத் தலைமை கீழறிங்கி வந்தது. இன்று தமிழ்நாட்டில் பாஜகவோடு கூட்டு சேருவோம் என்று மார்தட்டிச் சொல்லக்கூடிய கட்சி ஒன்றுகூடக் கிடையாது.

புதிதாகக் களமிறங்கிய இரண்டு ஸ்டார்கள் கூடுதலாகத் தங்களை அம்பலப்படுத்திக்கொண்டார்கள். மய்யத் தலைவர் கமல்ஹாசனின் திட்டமிட்ட உளறலையும் ஆன்மிக அரசியல் தலைவர் ரஜினிகாந்த்தின் மெளனத்தையும் மக்கள் பார்க்காமல் இல்லை.

எனவே, ராஜாவும் சரி பாஜகவைப் பார்த்து பூரிப்பவர்கள் அல்லது அச்சமடைபவர்களும் சரி, ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவெங்கும் நீங்கள் வகுத்துவரும் வியூகம் தமிழ்நாட்டில் பலிக்காது. சிலரை நீங்கள் விலைகொடுத்து வாங்கலாம். ஆனால், மக்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு ஒரு துளிகூட உயரப்போவதில்லை, மாறாகக் குறையவே செய்யும். இன்னும் ஓராண்டு அதிமுக அரசு நீடிக்குமானால் நாளைக்கு உங்களால் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸைக்கூடக் கட்டுப்படுத்த முடியாது (அதிமுக என்கிற அதிபயங்கரமான அரசியல் ஜந்துவைக் குறைத்து எடைபோட்டு வைத்திருக்கிறீர்கள்). ஒருவேளை பாஜகவின் அனைத்திந்திய பலத்தையும் ஆசை வார்த்தைகளையும் நம்பி யாரேனும் அவர்களோடு சேருகிறார்கள் என்றால் அவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிடும் என்பதுதான் உண்மை.

எப்போதும்போல, இந்துத்துவா சந்திக்கப்போகிற வாட்டர்லூ தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: தன்னாட்சித் தமிழகம் என்கிற அரசியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். மொழிசார் அரசியல் குறித்த ஆழமான சிந்தனைகளைப் பல தளங்களிலும் முன்வைத்து வருபவர். தொடர்புக்கு [email protected])

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon