மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

ஆண்களைக் கலாய்க்க ஒரு பாடல்!

ஆண்களைக் கலாய்க்க ஒரு பாடல்!

பெண்களைக் கலாய்க்கும் விதமாகப் பல பாடல்கள் வெளிவந்திருக்க ‘தமிழ்ப்படம் 2.0’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஆண்களைக் கலாய்க்கும் விதமாக வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த படங்களையும் கலாய்த்து வெளிவந்த படம் ‘தமிழ்ப்படம்’. பாரதிராஜாவின் கருத்தம்மா தொடங்கி முன்னணி நடிகர்களின் படங்களையும் கலாய்த்து உருவானது. புதுமையாகவும் அதேசமயம் எந்தவித சர்ச்சைகளையும் உண்டாக்காமல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றியைப் பெற்றது. எட்டு வருடங்களுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘தமிழ்ப்படம் 2.0’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

சிவா, ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் திஷா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் முதல் மற்றும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காகப் படக்குழு மலேசியா சென்றது. அங்கு பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தப் படத்தின் பாடல் ஒன்றை மகளிர் தின ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சி.எஸ். அமுதன் தனது முதல் படத்தில் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ஹிட் பாடல்களின் முதல் வரியை எடுத்துக் கொண்டு ‘ஓமகசீயா’ என்ற பாடலை தந்தார். அதே பாணியை இந்தப் படத்திலும் கையாண்டிருக்கிறார். என்.கண்ணன் இசையில் உருவாகியிருக்கும் ‘எவடா ஒன்ன பெத்தா’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை சந்துருவுடன் இணைந்து சி.எஸ்.அமுதன் உருவாக்கியிருக்கிறார்.

சிம்புவின் எவன்டி ஒன்ன பெத்தான் என்கிற பாடல் பெண்ணின் அழகைக் கண்டு ஆண் பாடும் விதமாக இருக்கும். அதே பாடல் பெண்ணின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். ரெனினா ரெட்டி குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலில் சிம்பு படப் பாடல் மட்டுமல்லாது தனுஷின் பாடலையும் கலாய்த்திருக்கின்றனர். ஆண்களைக் கலாய்க்கும் விதமாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் பெண்களிடம் வரவேற்பைப் பெற்று மூன்று லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றிருக்கிறது.

எவடா ஒன்ன பெத்தா பாடல்

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon