மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

மூதாட்டிகளுடன் மகளிர் தினம் கொண்டாடிய ஆளுநர்!

மூதாட்டிகளுடன் மகளிர் தினம் கொண்டாடிய ஆளுநர்!

தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நூறு வயது நிறைந்த நூறு மூதாட்டிகளுடன் மகளிர் தினத்தைக் கொண்டாடியுள்ளார் ஆளுநர்.

மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை சிறப்பாகவும் வித்தியாசமாகவும் கொண்டாட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளை அவரது தனிச் செயலாளர் கவனமாகச் செய்தார்.

நூறு வயதுள்ள மூதாட்டிகளைக் கண்டுபிடித்து பட்டியல் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, குறிப்பாகச் சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து உத்தரவு பறந்தது. மாவட்ட ஆட்சியர்கள் கீழ்மட்ட அதிகாரிகளை முடுக்கிவிட்டனர். கிராம நிர்வாக அதிகாரிகள் ஊர் ஊராக, வீதி வீதியாக தேடியலைந்தும் நூறு வயது மூதாட்டிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நூறு வயது பாட்டிகள் எந்த ஊரிலும் இல்லை என்று அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்கள்.

நூறு வயது நிறைந்த பாட்டிகள் கண்டிப்பாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதை அடுத்து, கிராம நிர்வாக அதிகாரிகள் 65 வயது முதல் 75 வயதுள்ள மூதாட்டிகளைக் கண்டுபிடித்து பெயர் பட்டியலை அனுப்பினார்கள். பட்டியலில் உள்ள மூதாட்டிகளைக் கிராம அதிகாரிகள் மூலமாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துபோய் மருத்துவப் பரிசோதனை செய்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் கடலூர் மாவட்டத்தில் 30 மூதாட்டிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 70 மூதாட்டிகளும் தேர்வானார்கள்.

மார்ச் 8ஆம் தேதி காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துணை ஆட்சியர் தலைமையில் இரண்டு தாசில்தார், இரண்டு பிடிஓ, ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உதவியாளர்களுடன் ஏசி வசதியுள்ள வேனில் புறப்பட்டவர்கள் காலை 11.30 மணிக்கு ராஜ்பவனுக்குள் சென்றார்கள்.

அனைவரையும் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பாதுகாப்பாக அழைத்துப் போய் ஓர் அறைக்குள் அமர வைத்தார்கள். மூதாட்டிகளுடன் சென்ற மெடிக்கல் டீம்களையும் மற்ற அதிகாரிகளையும் வெளியில் நிற்கவைத்துவிட்டு மூதாட்டிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சில நிமிடங்கள் பேசியதும் சாப்பிட அனுப்பி வைத்தார்.

வந்தவர்கள் அனைவருக்கும் கீரை, சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டதைச் சுவைத்துச் சாப்பிட்டார்கள், வெளியில் வரும்போது நூறு மூதாட்டிகளுக்கும் வீல் வைத்த பேக் வழங்கினார்கள். மூதாட்டிகளும் ஆர்வமாக ஆளுநர் கொடுத்த பேக்கில் என்ன இருக்கு என்று தெரிந்துகொள்ள அவசரமாகப் பிரித்துப் பார்த்தார்கள் .

பேக்கில் இரண்டு பெட்ஷீட், ஒரு சேலை, ஒரு சால்வை மட்டும் இருந்ததைப் பார்த்து உதட்டைப் பிதுக்கியுள்ளார்கள். அதன்பின் ஆளுநர் கொடுத்த வீல் பேக்கை இழுத்தபடி மகிழ்ச்சியாக வேனில் ஏறியதும் வேன் புறப்பட்டது.

‘ஆளுநர் நூறு வயது நிறைவடையாத மூதாட்டிகளுடன் நூறு வயது மூதாட்டி என்று நினைத்து மகளிர் தினத்தைக் கொண்டாடியுள்ளார். ஆனால் நூறு வயது பாட்டிகள் என்று சொல்லி எழுபது வயது பாட்டிகளைக் கொண்டுபோய் ஆளுநரை ஏமாற்றிவிட்டார்கள் அதிகாரிகள்’ என்று கடலூர் அரசு ஊழியர்கள் மத்தியில் பலமான பேச்சாக இருக்கிறது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon