மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

திரிபுரா: பாஜக அமைச்சரவை இன்று பதவியேற்பு!

திரிபுரா: பாஜக அமைச்சரவை இன்று பதவியேற்பு!

திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக அமைச்சரவை இன்று (மார்ச் 9) பதவியேற்கவுள்ளது.

பிப்ரவரி 18ஆம் தேதியன்று திரிபுரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதற்கான முடிவுகள், கடந்த 3ஆம் தேதியன்று வெளியானது. இதில், பாஜக – திரிபுரா சுதேசி மக்கள் முன்னணி கூட்டணி 43 தொகுதிகளைக் கைப்பற்றியது. குறிப்பாக, பாஜகவுக்கு 35 இடங்களும் திரிபுரா சுதேசி மக்கள் முன்னணிக்கு 8 இடங்களும் கிடைத்தன.

மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும் உரிமை பெற்றது. இதனால், சுமார் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பாஜகவின் திரிபுரா சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் தென்பகுதியிலுள்ள மாவட்டங்களில் வன்முறை பரவியது. இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. குறிப்பாக, பிலோனியா என்ற இடத்தில் லெனின் சிலை தகர்க்கப்பட்டது இந்தியா முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, திரிபுராவில் மேலும் வன்முறை பரவாமல் இருக்க ஆளுநர் ததாகதா ராயுடன் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தற்போது, அம்மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமையன்று (மார்ச் 6) திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், பாஜகவைச் சேர்ந்த பிப்லாப் குமார் தேப் முதலமைச்சராகவும் ஜிஷ்ணு தேப் பர்மன் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடைபெறும் விழாவில், பிப்லாப் குமார் தலைமையிலான பாஜக அமைச்சரவைப் பதவியேற்க உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மிருணாள் கந்தி தேப்.

வடகிழக்கு இந்திய மாநிலங்களில் திரிபுராவில் மட்டுமே பாஜக பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon