மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

மோடி, எடப்பாடி, பன்னீர் பார்க்க வேண்டிய படம்!

மோடி, எடப்பாடி, பன்னீர் பார்க்க வேண்டிய படம்!

பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி டெல்டாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரங்கள் பற்றி மத்திய, மாநில அரசுகளின் பிடரியைப் பிடித்து உலுக்கும் வகையில், ‘கொலை விளையும் நிலம்’ என்ற ஆவணக் குறும்படத்தை இயக்கி இருக்கிறார். இதன் வெளியீட்டு விழா மார்ச் 7ஆம் தேதி சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் விவசாயப் பிரச்சினைக்காக ஒரே மேடையில் அமர்ந்தது கவனிப்பை ஏற்படுத்தியது.

திருநாவுக்கரசர் வெளியிட்ட இந்தப் படத்தின் சிடியை திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொள்வதாக இருந்தது. ஆனால், துரைமுருகன் கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வரவில்லை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கட்சி பாலபாரதி, காங்கிரஸின் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் விவசாயப் பிரிவுத் தலைவர் பவன்குமார், விவசாயிகள் சங்கத் தலைவரான பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் திருநாவுக்கரசர் வழக்கமான அரசியல்வாதி உடையில் அல்லாமல், வாக்கிங் டிரஸ் ஆன ஷார்ட்ஸ் அணிந்து வந்துவிட்டார். உடையைப் போலவே அவரது பேச்சும் இயல்பாக இருந்தது.

“அன்புத்தம்பி ராஜீவ் காந்தி மிகுந்த சிரமப்பட்டு, கிராமங்களுக்குச் சென்று செயற்கரிய செயலை செய்து இந்த ஐம்பது நிமிட குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இது அவரின் முதல் படம் என்றார்கள். பொதுவாகவே முதல் படம் என்றால் இன்றைய கால கட்டத்தில் கமர்ஷியலாக ஹிட் கொடுத்துப் பெயரும் புகழும் எடுத்து பணம் சம்பாதிக்கவே பிரியப்படுவார்கள்.

நானும் திரைப்படங்களை எடுத்திருக்கிறேன். முதல் படம் கொஞ்சம் லாபம் கொடுத்தது. அடுத்த படம் நஷ்டம். அதன் பிறகு அந்தப் பக்கமே நான் போகவில்லை. தம்பி ராஜீவ் காந்தி தன் முதல்படமாக இதை எடுத்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் நாலு பைட், ரெண்டு சண்டை, கொஞ்சம் காமெடி டிராக் என்று எடுத்து காலம் தள்ளியிருக்க முடியும். ஆனால், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களின் யதார்த்தப் பேச்சை நாடகத் தனமில்லாமல் அவர்களின் மொழியிலேயே பதிவு செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது” என்று பாராட்டிவிட்டு தனது விவசாய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் திருநாவுக்கரசர்.

“விவசாயப் பெருமக்களின் அவஸ்தையை அவர்களின் துன்பத்தை துயரத்தை வேதனையை அருகிலிருந்து அனுபவித்தவன் நான். இதே டெல்டா பகுதியில் காவிரியின் கடைப்பகுதியை சேர்ந்தவன் நான். பேராவூரணிக்கும் அறந்தாங்கிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள நாகுடி என்ற கிராமத்தில் எனக்கும் இருபத்தி ஐந்து ஏக்கர் இருக்கிறது.

என் தம்பி அங்கு விவசாயம் பார்க்கிறார். நிலத்துக்கு நடுவே இரண்டு கிணறுகள் இருந்தும் வரவேண்டிய வெள்ளாமையில் பாதி எடுப்பதற்கே படாத பாடுபட வேண்டிய சூழல். எங்கள் நிலத்தின் அருகில் சுற்றுவட்டாரத்தில் எல்லோருமே சிறு குறு விவசாயிகள் அவர்களின் வயல்கள் எல்லாம் வறண்டுபோய் பாலம் பாலமாகப் பிளந்து காய்ந்து கட்டாந்தரையாக பல வருடங்களாகக் காய்ந்து கிடக்கின்றன அவர்களின் அவஸ்தையைப் புரிந்தவன் நான்.

இன்றைக்கு நம்மை ஆளும் மத்திய அரசு நயவஞ்சகமாக நரித்தந்திரத்தோடு விவசாயிகளைத் தமிழக மக்களை ஏமாற்றிவருவதை கண்கூடாகப் பார்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலே இறுதித் தீர்ப்பிலே ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என்றார்கள்.

இதோ மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. இப்போதுதான் செயலாளர்களுக்கான மீட்டிங்கையே அந்தத் துறை அமைச்சர் கூட்டப் போகிறார். செயலாளர்கள் கூடி எந்த முடிவும் எடுக்க முடியாது. இது முழுக்க முழுக்க தமிழர்களை ஏமாற்றும் வேலை. காவிரிப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேலாண்மை வாரியம் அமைக்கும் வேலையை நீர்த்துப்போகச் செய்வதற்கான தள்ளிப்போடுவதற்கான, காலம் கடத்துவதற்கான முயற்சி எனக் குற்றம்சாட்டுகிறேன்” என்ற திருநாவுக்கரசர்,

“தமிழகத்திலே அனைத்துக் கட்சிகளும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு காவிரிப் பிரச்சினைக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். பாஜக உள்ளிட்ட தலைவர்கள் சேர்ந்து பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்துவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றி நேரம் கேட்டால் தர மறுக்கிறார் இந்தப் பிரதமர். கலைஞரோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இருந்திருந்தால் மோடிக்கு இந்த அலட்சியத்தனம் குருட்டு தைரியம் வந்திருக்குமா?’’ என்று கேள்வி கேட்டார் திருநாவுக்கரசர்.

“தம்பி ராஜீவ் காந்தியின் இந்தப் படம் மக்கள் அனைவரின் பார்வைக்கும் செல்ல வேண்டும். முதலில் மோடி, எடப்பாடி, பன்னீர்செல்வம், அரசு அதிகாரிகள் என முதலில் இவர்கள் பார்க்க வேண்டும். அப்போதாவது அவர்களுக்குப் புத்தி வருகிறதா? உரைக்கிறதா என்று பார்ப்போம். இந்தப் படத்தை வெகுஜனங்களிடம் கொண்டுசெல்லும் வேலையை தமிழக காங்கிரஸ் கமிட்டியும் பங்கெடுக்கும்” என்று உறுதி தந்து நிறைவு செய்தார் திருநாவுக்கரசர்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon