மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

சிறப்புக் கட்டுரை: பேட்மேனுக்குப் போட்டியாக பேட்வுமன்!

சிறப்புக் கட்டுரை: பேட்மேனுக்குப் போட்டியாக பேட்வுமன்!

அப்துல் கனி

ஜோனாலி பாங்க்ஷோ தனது 20ஆவது வயதில் பமோஹி கிராமத்துக்குக் குடியேறினார். இது கவுகாத்தியின் எல்லையை ஒட்டிய பகுதியாகும். வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்துக்குட்பட்ட கிராமமாகும். இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலானோர் கர்பி பழங்குடியினராவர். அசாமில் உள்ள வளர்ச்சியுற்ற கிராமத்திலும் மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசமாட்டார்கள்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக் ஷய் குமார் நடிப்பில் வெளியான பேட்மேன் திரைப்படம் மாதவிடாய் குறித்த சிந்தனைகளை மாற்றியுள்ளது. இந்தப் படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக தொழில்முனைவோரான அருணாசலம் முருகானந்தத்தின் நிஜ வாழ்க்கைக் கதையாகும். இவர் குறைந்தவிலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் யந்திரத்தை வடிவமைத்துள்ளார். மேலும், பழக்கவழக்கங்களின் பெயரால் பாதுகாப்பற்ற துணிகளை, சாம்பல்களை, மரத்தூள்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை மாற்றிப் பாதுகாப்பான நாப்கின்களைப் பயன்படுத்த ஊக்குவித்தும் வருகிறார்.

பமோஹியைப் பொறுத்தவரையில் இளைய தலைமுறைப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது மட்டுமின்றி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய நாப்கின்கள் பயன்பாட்டுக்கும் மாறியுள்ளனர். அவர்கள் மாதவிடாய் சுகாதாரம் பற்றிப் புரிந்துகொண்டிருப்பதுடன், அனைவரும் தெரிந்துகொள்ள விழிப்புணர்வும் அளிக்கிறார்கள். இந்த மாற்றங்கள் தானாக நடக்கவில்லை. உத்தம் தேரான் மற்றும் ஐமோனி துமாங்கின் பாரிஜாத் அகாடமி நடத்திய நிகழ்ச்சிகளுக்குப் பின்னர்தான். இந்த அமைப்பு மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களின் பயன்கள், உடல்நலம் மற்றும் சுகாதார நலம் குறித்து அந்த மக்களிடம் பேசியது.

“இந்த அமைப்பு எங்களிடம் நடத்திய விவாதங்கள் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தன. இதற்கு முன்னர் மாதவிடாய் பற்றி வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் ஆண்கள் முன்பு வெளிப்படையாகப் பேசியதே இல்லை” என்கிறார் பாங்க்ஷோ. இந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பத்தினர் மிகவும் ஏழைகள்; படிக்காதவர்கள். பழைய துணிகளைத்தான் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தி வந்தனர் என்றும் பாங்க்ஷோ கூறுகிறார். தேரோன் மற்றும் ஐமோனி அளித்த விழிப்புணர்வுக்குப் பின்னர்தான் பொதுவெளியில் மாதவிடாய் குறித்துப் பேசுவதே இந்த மக்களுக்கு எளிமையானது. பாரிஜாத் அகாடமி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பமோஹியில் உள்ள குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்து வருகிறது. வசதி வாய்ப்பற்ற, சமூகத்தால் புறக்கணிக்கப்படும் சூழலில் உள்ள குழந்தைகளுக்குத் தங்குவதற்கான வசதியும் அளித்துப் படிக்க வைக்கிறது. விழிப்புணர்வு அளித்து மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறார் தேரோன். ஆனால், இப்போது ஆண்களும் இதைப்பற்றிப் பேசுமளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம் என்கிறார் அவர்.

அங்குள்ள உள்ளூர் விவசாயியான குடு போங்காங் இவ்வாறு நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். மலைகளின் மத்தியில் உள்ள கற்பாங்கா கிராமத்தில் நடந்த நிகழ்வில் இவர் ஒருமுறை கலந்துகொண்டுள்ளார். இவர் உடல்நலம் குறித்த அறியாமையில் இருந்தார். ஆனால், பாரிஜாத் உடல்நலம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசவைத்து இவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக வெளியான தேசிய சுகாதார ஆய்வறிக்கையின்படி 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 42 சதவிகிதம் பேர் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். 62 சதவிகிதம் பேர் துணிகளையும், 16 சதவிகிதம் பேர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களையும் பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தமாக 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 58 சதவிகிதம் பேர் மட்டும்தான் தூய்மையான முறைகளைக் கையாளுகின்றனர். அசாமைப் பொறுத்தவரையில் இந்த வயதுகொண்ட 41 சதவிகித கிராமப்புறப் பெண்கள் தூய்மையான முறைகளைக் கையாளுகின்றனர். கவுகாத்தி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர் ரேஹ்னா சுல்தானா இதுபற்றிக் கூறுகையில், “70 சதவிகித கிராமப்புற பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லை. இதனால் அவர்களுக்கு நோய்களும் உண்டாகிறது” என்றார்.

2011ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி மானிய விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் இலக்கை அடைவதில் தோல்வியே கண்டது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் முறையான அக்கறை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான சுகாதார வசதிகளைப் பயன்படுத்தத் தவறுவதன் மூலம் பெண்களுக்கு அதிகளவில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகப் பல்வேறு வல்லுநர்கள் கூறுகின்றனர். “மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையைப் பின்பற்றுவதால் இடுப்பு அழற்சி நோய் (பிஐடி) ஏற்படுகிறது. இது பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிற முக்கியப் பிரச்சினையாக உள்ளது” என்கிறார் அனுதிரிதி துட்டா. இவர் பிரதிக்ஷா மருத்துவமனையில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

கிராமப்புற பெண்கள் சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்தாததற்கு அவர்களின் வறுமையும், போதிய விழிப்புணர்வு அற்ற தன்மையுமே முக்கிய காரணமாக உள்ளது. “நான் கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது, பெரும்பாலான இளம்பெண்கள் மாதவிடாய் காலங்களில் வகுப்புக்குச் செல்வதைத் தவிர்த்து விடுகின்றனர் என்பதை அறிய முடிந்தது” என்கிறார் சுல்தானா. இந்தப் பெண்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் இந்தப் பெண்களுக்குக் கிடைப்பது அவசியமாக உள்ளது. எனவே நாப்கின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாப்கின்களுடன் கூடிய புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பதிவிடவும் சுல்தானா வலியுறுத்தியுள்ளார். “சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்தாமல் பல்வேறு பெண்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், நாங்கள் இப்போது சுகாதாரமான நாப்கின்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இந்த மாற்றத்தைக் கண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி” என்கிறார் பாங்க்ஷோ.

இந்த மாற்றங்கள் எல்லாம் 2017ஆம் ஆண்டு ஜூலைக்குப் பிறகுதான். இவர்கள் சில தன்னார்வலர்களுடன் சேர்ந்து ஃப்ளோரிடாவில் நடந்த ‘டேஸ் ஆஃப் கேர்ள்ஸ்’ நிகழ்வுக்குச் சென்றிருந்தனர். இந்த நிகழ்வுக்கு இவர்கள் பாரிஜாத் அகாடமியின் மூலம் சென்றனர். டோல்லியன் பெர்கின்ஸ் மற்றும் அவரது உதவியாளர்கள் பருத்தித் துணிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களை எப்படித் தயாரிக்கின்றனர் என்று ஐமோனி நினைவுகூர்ந்தார். “இக்கிராமத்தைச் சேர்ந்த இளைய பெண்களும், பெண்களும் சுகாதாரமற்ற முறைகளை மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தி வந்தது அதிர்ச்சி அளித்தது. இப்போது 15 பெண்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நாப்கின்களைத் தயாரிக்க பயிற்சியளிக்கிறோம்” என்கிறார் ஐமோனி. இவர் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நாப்கின்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்.

இந்த நாப்கின்கள் பாதுகாப்பு கவசம் மற்றும் லைனர் என்ற பகுதிகளைக் கொண்டுள்ளன. மூன்று பருத்தித் துண்டுகளைத் தைத்து, பழுப்புத் துணியைத் தேவையான வடிவத்தில் வெட்டி, இரண்டு பிளாஸ்டிக் பொத்தான்களைக் கொண்டு இந்த நாப்கின்களை வடிவமைக்கின்றனர். பின்பு இதன் உட்பகுதியில் பாலியூரிதினால் லேமினேட் செய்யப்பட்டுப் பொருத்தப்படுகிறது. இவ்வாறு லேமினேட் செய்யப்படுவதன் மூலம் கசிவைத் தடுக்க இயலும் என்று ஐமோனி கூறுகிறார்.

துளசி இங்தியின் மகள் பாரிஜாத் அகாடமியில் படிக்கிறார். இவர் தொடக்கத்தில் சாதாரண நாப்கின்களையே பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். ஆனால், இப்போது மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இதைத் தயாரிக்க ஆகும் செலவுகளைப் பொறுத்து இதற்கான விலையை ஐமோனி நிர்ணயித்திருப்பதாகக் கூறுகிறார். பெரிய நாப்கின்களுக்கு 110 ரூபாயும், சிறிய நாப்கின்களுக்கு 80 ரூபாயும் விலை நிர்ணயித்துள்ளனர். இந்த நாப்கின்களை மூன்று முதல் நான்கு வருடங்களுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார் ஐமோனி.

இதை மக்களிடம் சந்தைப்படுத்தும் விதமாக கற்பாங்கா உள்ளிட்ட அருகிலுள்ள கிராமங்களுக்கு இலவசமாக மாதிரி பயன்பாட்டுக்கு அளித்துள்ளார். அதிகமாக வறுமைக்கோட்டு எல்லையில் உள்ள பெண்களுக்கும், மாணவிகளுக்கும் அளித்துள்ளார். “இதன் பிறகு பல்வேறு நிறுவனங்களும், அமைப்புகளும் எங்களிடம் மொத்தமாக நாப்கின்கள் வாங்க ஆர்டர் அளித்தனர்” என்கிறார் ஐமோனி. வீட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நாப்கின் பயன்பாட்டுக்கு மாறியதாகக் கூறுகிறார் போங்ஜாங். இவர் மாதம் 5,000 ரூபாய்க்குக் குறைவாகவே வருவாய் ஈட்டுகிறார். இவருடைய குடும்பத்தில் மொத்தமாக நான்கு பெண்கள் உள்ளனர். இதனால் மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின்கள், நாப்கின் செலவைப் பெருமளவு குறைத்துள்ளது.

பெண்களுக்கான சுகாதாரமான நாப்கின் வசதிகள் கிடைக்கச் செய்ய ஒவ்வொரு தனிமனிதனும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் தேரோன். மேலும், “ஒரு லட்சம் இளம் பெண்களிடம் மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின்களைக் கொண்டுசெல்ல இலக்கு வைத்துள்ளோம். இதற்கான தயாரிப்புத் தேவையும் அதிகமாக உள்ளது” என்கிறார் அவர். பாரிஜாதத்தில் இந்த நாப்கின்கள் தயாரிக்க கற்றுக்கொள்ளும் இளம் பெண்கள் தங்கள் வீடுகளில் இவற்றைத் தைக்கத் தொடங்குகின்றனர்.

“நாங்கள் தினசரி 30 நாப்கின்களை தயாரிக்கிறோம். இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 வரை வருவாய் ஈட்டுகிறோம். இது எங்கள் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறது” என்கிறார் ஜமுனா. “இப்போது இங்குள்ள எல்லோரும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின்களை விநியோகம் செய்யத் தொடங்கிவிட்டனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் எங்களுடைய நிதித் தேவை மிக அதிகமாக உள்ளது. நிதி போதுமான அளவில் இருந்தால் சமூகத்தில் பின்தங்கியுள்ள இன்னும் பல பெண்களை நாங்கள் அடைவோம்” என்கிறார் தேரோன்.

நன்றி: வில்லேஜ் ஸ்கொயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon