மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

பணியில் இருந்த ராணுவ வீரர் தற்கொலை!

பணியில் இருந்த ராணுவ வீரர் தற்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று (மார்ச் 8) பணியில் இருக்கும்போது, தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ராணுவ முகாமில் காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை உள்ள எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்திய எல்லையில் நடக்கும் சண்டையில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தற்போது பணியில் உள்ள ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொள்வது, பொதுமக்களுக்கு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வார்னோ பகுதியில் ராணுவ முகாம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ராணுவ முகாமில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாயக் ஷங்கர் சிங் என்ற ராணுவ வீரரும் பணியில் இருந்தார்.

நேற்று பணியில் இருந்த அவர், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். முகாமில் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதும், அங்கிருந்த சக வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஷங்கர் சிங்கை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இரு நாள்களில் இரண்டு ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டது, இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள்; இதற்கு என்ன காரணம் என்று காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் குப்வாரா மாவட்டத்தின் லான்கேட் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரேந்தர் சின்ஹா என்ற ராணுவ வீரர் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon