மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: கமல் அறிவிப்பு

உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: கமல் அறிவிப்பு

திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தின விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமூக செயல்களில் ஈடுபட்டுவரும் பல்வேறு பெண்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. இதேபோல், திருச்சியில் போலீஸாரின் வாகன சோதனையின்போது உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், “மய்யம் என்ற பெயருக்கு, எல்லாவற்றிலும் மையத்தில் இருப்பீர்களா எனக் கேலி செய்கிறார்கள். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும் நியாயமும் புரியும். ஆண்களுக்கு நிகராக பெண்களின் ஜனத் தொகையும் இருக்க வேண்டும். தாய் இல்லாமல் நாம் இல்லை.

உங்கள் கொள்கையை எப்போது சொல்வீர்கள் எனக் கேட்கிறார்கள். நிச்சயம் சொல்வோம். சாத்தியம் என்பது சொல் அல்ல, செயல் என்பதை நம்பிக்கொண்டு இருக்கும் கூட்டத்தின் தலைவன் நான். சினிமாவுக்கு நிறைய நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இந்த வேலையைச் செய்யாமல் நான் போக மாட்டேன்.

கன்று இறந்துவிட்டால் தாய் பசுவிடம் இருந்து பால் கறப்பதற்காகக் கன்றின் உடலுக்குள் வைக்கோலை வைத்து தாய் பசுவை ஏமாற்றி பால் கறப்பார்கள். அதுபோல், நல்ல தலைவர்களை நினைவுகூர்ந்து உங்களிடம் ஓட்டுக்களைப் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள் தற்போது உள்ளவர்கள். கயவர்களுடன், கூட்டணி வைக்க மாட்டோம்.

திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியைச் செய்துள்ளனர். சிறப்பாகச் செயல்படும் காவலர்களைப் பாராட்டாமல், தவறாகச் செயல்படும் காவலர்களைத் தண்டிக்க முடியாது. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிய விஷயம் தெரிந்தவர்கள், மய்யத்துக்கு வாருங்கள். தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon