மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

பாலின அடிப்படையில் ஊதியப் பாகுபாடு!

பாலின அடிப்படையில் ஊதியப் பாகுபாடு!

இந்தியப் பெண்கள் ஆண்களை விட 20 சதவிகிதம் குறைவாகவே ஊதியம் வாங்குகின்றனர் என்று மான்ஸ்டர் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே பாலினப் பாகுபாடு நிலவுவதைப் போல ஆண் - பெண் ஊதிய வேறுபாடும் பெருமளவில் காணப்படுகிறது. இதுகுறித்து புதன்கிழமை (மார்ச் 7) வெளியான மான்ஸ்டர் ஆய்வறிக்கையில், ‘2017ஆம் ஆண்டில் ஆண் - பெண் ஊதிய வேறுபாடு 20 சதவிகிதமாக உள்ளது. 2016ஆம் ஆண்டில் ஊதிய வேறுபாடு 24.8 சதவிகிதமாக இருந்தது. சராசரியாக ஆணின் ஊதியம் 231 ரூபாயாக இருந்தால் பெண்ணின் ஊதியம் 184.8 ரூபாயாக மட்டுமே உள்ளது.

பணி அனுபவத்தைப் பொறுத்து ஊதிய வேறுபாடும் மாறுபடுகிறது. உதாரணமாக 0-2 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆண் - பெண் ஊதிய வேறுபாடு 15.3 சதவிகிதமாக உள்ளது. ஆனால் 11 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்கு ஊதிய வேறுபாடு 25 சதவிகிதம் அளவுக்குக் காணப்படுகிறது. 69 சதவிகிதம் பேரின் பதில்கள் பல முன்னணி நிறுவனங்களில் பெண்களுக்கு ஊதிய பாகுபாடு இருப்பதை உறுதி செய்கிறது. பாலின அடிப்படையிலான ஊதிய வேறுபாட்டைப் போக்க புதிய கொள்கைகளை வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, வேலை செய்கின்ற 5,500 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 3,100 பேர் பெண்களாவர். 2,300 பேர் ஆண்களாவர். டெல்லியில் 24 சதவிகிதம் பேரிடமும், மும்பையில் 22 சதவிகிதம் பேரிடமும், பெங்களூருவில் 20 சதவிகிதம் பேரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon