மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

கிச்சன் கீர்த்தனா: சப்பாத்தி உப்புமா!

கிச்சன் கீர்த்தனா: சப்பாத்தி உப்புமா!

தலைப்பைப் பார்த்த உடனேயே, ‘என்ன கீர்த்தனா இதுகூட தெரியாதா? சப்பாத்தி எப்படி உப்பும் பூரிதான் உப்பும்’ என்று கமெண்ட் அடிக்க காத்திருக்கும் தோழிகள் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள். சில நாள்களுக்கு முன்புதான் உப்புமா பற்றிய வெரைட்டிகளைப் பார்த்தோம். ரவை உப்புமா, கோதுமை உப்புமா என்று மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் வாருங்கள் சப்பாத்தி உப்புமா செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

சப்பாத்தி - 6

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - சிறிதளவு

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

மஞ்சள்தூள் - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை:

சப்பாத்தியைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேங்காய்த்துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.

கடைசியாகக் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

நீ யார் என்பதை நிரூபிக்க ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைனு பல உள்ளன. ஆனால், நீ மனிதன் என நிரூபிக்க அன்பு ஒன்றே உள்ளது!

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon