மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

தெலுங்கு தேசம் அமைச்சர்கள் ராஜினாமா!

தெலுங்கு தேசம் அமைச்சர்கள் ராஜினாமா!

ஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்காததால், தாங்கள் வகித்துவந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஒய்.எஸ்.சவுத்ரி. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவது குறித்து எந்த முடிவையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் 17 இடங்களைக் கைப்பற்றியது. ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் பாஜக இடம்பிடித்தது. அதேபோல, மத்திய பாஜக அரசில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஒய்.எஸ்.சவுத்ரி இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

நான்கு ஆண்டுகளாக இந்தக் கூட்டணி தொடர்ந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக இடையே உரசல் போக்கு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, அமராவதி நகர் கட்டமைப்பு மற்றும் ஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது தெலுங்கு தேசம் கட்சி.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 7) பாஜக கூட்டணி அரசில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்று அறிவித்தார் சந்திரபாபு நாயுடு. மேலும், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 8) சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் பேசினார் மோடி. அதன்பிறகு, நேற்று மாலை அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஒய்.எஸ்.சவுத்ரி இருவரும் டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்தில் மோடியைச் சந்தித்துப் பேசினர். அப்போது, அவரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை இருவரும் அளித்தனர். ஆனால், அவர்களது ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மோடி பரிந்துரை செய்ததாகத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பிரதமர் மோடியைச் சந்தித்தபிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர். அப்போது, “நாங்கள் அமைச்சர் பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்துள்ளோம். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம்” என்று தெரிவித்தார் ஒய்.எஸ்.சவுத்ரி. மேலும், “ஆந்திரா மாநிலத்தின் நலனுக்காகப் பதவியை ராஜினாமா செய்வதில் தவறேதும் இல்லை” என்று கூறினார். “ராஜினாமா கடிதத்தைப் பெற்ற பிரதமர் மோடி, தான் ஆந்திர மாநில மக்களுடன் இருப்பதாகக் கூறினார். ஆந்திர மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதைப் பிரதிபலிக்கும் சரியான முடிவை எடுத்துள்ளார் சந்திரபாபு நாயுடு” என்றார் சவுத்ரி.

“மாநில நலனுக்காக நிறைய தியாகங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆந்திர மக்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்தார் அசோக் கஜபதி ராஜூ.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆந்திரா மாநில அமைச்சர் கே.எஸ்.ஜவஹர், “இதுவரை 29 முறை டெல்லி சென்றுள்ளார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசிடம் விவாதித்தார்; கெஞ்சினார். இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் போராடத் துணிந்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மத்திய அமைச்சர்கள் இருவரது ராஜினாமாவைக் கண்டித்து, ஆந்திரா அமைச்சரவையில் இடம்பெற்ற பாஜக அமைச்சர்கள் காமினேனி சீனிவாஸ், பைடிக்கொண்டல மாணிக்யாலா ராவ் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

,

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon