மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

காவிரி: சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை!

காவிரி: சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை!

கர்நாடகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, சட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைப்படி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு 14.75 டிஎம்சி நீரைக் கூடுதலாக ஒதுக்கித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அடுத்த ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. நீர் அதிகமாக வழங்கப்படுவதை மட்டும் வரவேற்ற கர்நாடகம், மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவுக்கு மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி பிரச்சினை குறித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், கர்நாடகாவிலும் 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஒருநாள் தாமதமான நிலையில், நேற்று (மார்ச் 8) மாலை கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாதக, பாதகங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் என்ன என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்படவில்லை. எனவே, சட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைப்படி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுவரை பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon