மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

காவலர் தற்கொலைகள் தீர்வு என்ன - நீதிபதி!

காவலர் தற்கொலைகள் தீர்வு என்ன - நீதிபதி!

‘காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும்?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவலர்களின் குறைகளைத் தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் காவலர்கள் தற்கொலை அதிகரித்துவருவதால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி நீதிபதி கிருபாகரன் முன்பு வழக்கறிஞர் புருஷோத்தமன் முறையிட்டார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “காவல் துறையினர் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகிறது. அவர்களுக்கு உரிய விடுப்பு வழங்கப்படுவதில்லை. அவர்கள் குடும்ப நிகழ்ச்சியில்கூட கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது” என்றார்.

மேலும் அவர், “காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும்?” என்றும், “விஐபிக்கள் வரும் இடங்களில் காவலர்களை நாள் முழுவதும் நிறுத்தி வைப்பது ஏன்?” என்றும், “அவர்களுக்கு எத்தனை நாள் பொது விடுமுறை வழங்கப்படுகிறது?” என்றும் சரமாரி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறினார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “காவல் துறையில் 19 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி, “ரவுடிக்கு கேக் ஊட்டி விடும் காவலர்கள் இருக்கும்போதுதான், காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது” என்று வேதனை தெரிவித்தார். மேலும், “அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களது பணிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியது நமது கடமை” என்றும் தெரிவித்தார்.

இதன்பிறகு, ‘காவலர்களின் குறைகளைத் தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று வரும் 19ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon